பாபநாசம்: ஏழை மாற்றுத்திறனாளிக்கு சொந்த நிதியில் வீடு கட்டிக் கொடுத்த பேரூராட்சி உறுப்பினர்

By செய்திப்பிரிவு

பாபநாசம் பேரூராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட திருப்பாலைத்துறை எஸ்.பி.ஜி. மிஷின் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(58). மாற்றுத்திறனாளியான இவருக்கு, சாராசெல்வி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள இவர்கள் கீற்றுவீட்டில் வசித்து வந்தனர்.

இதையடுத்து, “2 பெண் குழந்தைகளுடன் மிக மோசமான நிலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறோம். எனவே, எங்களுக்கு, புதிய வீடு கட்டித்தர வேண்டும்” என அப்பகுதி பேரூராட்சி உறுப்பினர் கீர்த்திவாசனிடம் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்தார். இவர்களின் ஏழ்மை நிலையை அறிந்த கீர்த்திவாசன், தனது சொந்த செலவில் ரூ.1.5 லட்சம் மதிப்பில், சிமென்ட் சிலாப்புகளால் கட்டப்பட்டு, ஆஸ்பெட்டாஸ் ஷீட் மேற்கூரை போடப்பட்ட புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளார்.

இந்த புதிய வீட்டின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்தார். பாபநாசம் திமுக நகரச் செயலாளர் கபிலன் முன்னிலை வகித்தார். பாபநாசம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பிரேம்நாத் பைரன் வரவேற்றார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமலிங்கம், புதிய வீட்டை திறந்து வைத்தார். புதிய வீட்டின் சாவியையும், மின்விசிறியையும் ஜெயக்குமாரிடம் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் வழங்கினார்.

புதிதாக வீடு கட்டிக் கொடுத்த பேரூராட்சி உறுப்பினர் கீர்த்திவாசனுக்கு, மாற்றுத்திறனாளியான ஜெயக்குமாரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE