சென்னை: "கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம்" என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்பு எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் சென்றார். சேலத்தில் பேசிய அவர், "சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில், அதிமுகவும் கூட்டணியில் இருந்த பாமகவும் சேர்ந்து 10 இடங்களில் வென்றது. சேலம் அதிமுகவின் கோட்டை. முதல்வர் ஸ்டாலின் அவர்களே, ஆட்சி உங்களுடையதாக இருக்காலம். ஆனால், சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை அதிமுகவினுடையது" என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்துள்ள திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அதிமுக "கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம்" என்று தெரிவித்துள்ளார். இது குறித்து டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சொந்தக் கட்சிக்குள்ளேயே தனக்கு ஆதரவு தேடி ஊர் ஊராக அலையும் பழனிசாமி, முதலமைச்சராக இருந்தபோது கொள்ளையடித்த பணத்தில் கூட்டத்தைத் திரட்டி வைத்துக் கொண்டு, “இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, அதிமுக வெற்றி பெறுவதற்கான அச்சாரம் போடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது” என்று வசனம் பேசியிருக்கிறார்.
திமுகவைத் திட்டினால்தான் மூன்று வேளை சோறு தின்று வயிறு வளர்க்க முடியும் என்பதே அதிமுகவில் உள்ள ‘அவதாரங்களின்’ நிலைமை. தங்களுடைய கட்சியின் தலைமை அலுவலகத்தின் வாசலிலேயே பழனிசாமி கோஷ்டியும் பன்னீர்செல்வம் கோஷ்டியும் ரணகளமாக்கி, ரத்தம் சொட்டச் சொட்ட, ‘ரத்தத்தின் ரத்தங்கள்’ நாங்கள் என்று ஊரறிய-உலகமறிய சம்பவம் நிகழ்த்தினார்கள். அதன்பிறகு, இடைக்காலத் தலைமைப் பொறுப்பை ஏற்ற பழனிசாமி, தன் திடீர் அதிகாரத்தால் பன்னீர்செல்வத்தை நீக்கினார். தலைமை அலுவலகத்தில் இருந்த பன்னீர்செல்வம் பழனிசாமியை நீக்கினார். கட்சி அதிகாரத்திற்கான அவர்களின் இந்தத் தெருச்சண்டையை மறைக்க, திமுக மீது பாய்கிறார் பழனிசாமி.
» ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குரங்கு அம்மை சிறப்பு வார்டு தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
» கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு தினம்: பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி
தன்னுடைய சொந்த மாவட்டமான சேலத்திற்குச் சென்றுவிட்டு, சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்றும், சட்டமன்றத்தில் அந்த மாவட்டத்தில் வென்றதுபோல மற்ற மாவட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தால் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்திருக்கும் என்று பேசியிருக்கிறார். கொள்ளையடித்த பணத்தைச் செலவு செய்து பெற்ற சொற்ப - அற்ப வெற்றியைக் காட்டி உண்மையை மறைக்க நினைக்கும் பழனிசாமிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
அண்மையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதே சேலம் மாவட்டத்தில் அதிமுக மண்ணைக் கவ்வியிருப்பதையும் மக்களின் பேராதரவுடன் சேலம் மாவட்டம் திமுக கோட்டையாகத் திகழ்வதையும் மறந்துவிட வேண்டாம். எப்படி மறக்க முடியும்? எடப்பாடி நகராட்சி உள்பட பெரும்பான்மையான இடங்களில் திமுகவும் தோழமைக் கட்சிகளும் அமோக வெற்றி பெற்றிருப்பதைப் பழனிசாமியால் தூக்கத்திலும் மறக்க முடியாது. சேலம் மட்டுமல்ல, தமிழ்நாடே இப்போதும் இனி எப்போதும் திமுக கோட்டைதான். அன்பு எனும் கோட்டை கட்டி மக்களின் இதய சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறார் முதலமைச்சர்.
இந்திய அளவில் திறமைமிக்க - பெருமைமிக்க முதலமைச்சராக இருக்கிறார். இதனைப் பொறுக்க முடியாமல், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது என்று வாய்ச்சவடால் அடிக்கும் பழனிசாமி என்ன நிர்வாகத்தை நடத்தினார் என்றே தெரியவில்லை. முந்தைய ஆட்சிக்காலத்தில் முடிக்காமல் கிடப்பில் போட்ட திட்டங்களை நிறைவேற்றி, மக்களுக்குப் பலன் தரச் செய்வதுதான் கழக ஆட்சி. உங்களைப் போல மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை முடக்கிப் போடும் ஆட்சியல்ல. உலகப் புகழ் பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அண்ணாவின் பெயரைக் கட்சியின் லேபிளாக வைத்துக்கொண்டு சிதைக்கின்ற ஆட்சியல்ல எங்கள் திமுகழக ஆட்சி.
திமுகழக ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயம்பேடு பேருந்து நிலையத்தையும், சர்வதேச தரத்திலான சென்னை மெட்ரோ ரயில் சேவையையும் அதிமுக ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி வைத்தாரே அப்போது இந்தப் பழனிசாமி எங்கே போயிருந்தார்? எந்த டேபிளுக்கு கீழே ஊர்ந்து - தவழ்ந்து எவருடைய கால்களைத் தேடிக் கொண்டிருந்தார்?
திமுக ஆட்சியின் திட்டங்களைச் சிதைத்து - முடக்குவது, அல்லது முழுமையடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து வெட்கமே இல்லாமல் தங்கள் பெயரை வைத்துக் கொள்வது இதுதானே அதிமுக ஆட்சிக்காலத்தின் வாடிக்கையாக இருந்தது!திமுக ஆட்சி என்றால் நாள்தோறும் திட்டங்கள், ஒவ்வொரு நாளும் சாதனைகள் என மக்கள் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் புலம்பித் தவிக்கிறார் பழனிசாமி. தன் உடல்நலனைப் பொருட்படுத்தாமல் - நேரம் காலம் பார்க்காமல் மக்கள் பணியாற்றுகின்ற முதல்வரைத் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. இது நாம் பெற்றுள்ள பெரும் பேறு!
திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிடுகிறார். திட்டங்களைத் தொடங்கி வைக்கும்போது ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து கோட்டையிலிருந்து காணொலி வாயிலாக அதனை நடத்தி, மக்களுக்குப் பயன் கிடைக்கச் செய்கிறார். அதிமுக ஆட்சியில் கோட்டைக்குள் நுழைந்து ரெய்டு நடத்தினார்கள். டிஜிபி அலுவலகத்தில் ரெய்டு நடந்தது. ஒவ்வொரு அமைச்சர் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இந்த ரெய்டுகளை நடத்திய ஒன்றிய பாஜக அரசை நோக்கி ஒரு வார்த்தைகூட இதுவரை பேச வாய் இல்லாத - முதுகெலும்பு இல்லாத பழனிசாமி, தன் வயிற்றுப் பிழைப்புக்காக திமுகவைத் திட்டுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம். உங்களைப் போன்ற ஊழல் பெருச்சாளிகளை தமிழ்நாட்டு மக்கள் இனிமேல் கோட்டைக்குள் ஒருபோதும் நுழைய விடமாட்டார்கள்.
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் சொந்த பந்தங்கள் - ரத்த உறவுகளுக்கு ஒட்டுமொத்தமாக காண்ட்ராக்ட் கொடுத்து கமிஷன் ராஜ்ஜியம் நடத்திய பழனிசாமி வகையறாக்கள் மீது ஒன்றிய அரசின் துறைகள் தொடர்ச்சியாக ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் ரெய்டுக்குள்ளான கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் 500 கோடி ரூபாய் சொத்துகளுக்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதுபற்றி இதுவரை வாய் திறக்க வக்கில்லாதவர்தான் பழனிசாமி. கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல், அதிமுகவின் ஜெயக்குமார் ‘மெயின் ரோட்டில்’ நின்று கூச்சலிடுபவரைப் போல ஏதேதோ உளறிக் கொட்டி, அதற்கும் பதிலடியை வாங்கிக் கட்டியிருக்கிறார்.
அதிமுகவை டெல்லி எஜமானர்களிடம் அடமானம் வைத்து, தன்னையும் தான் கொள்ளையடித்த சொத்துகளையும் பாதுகாத்துக் கொள்ளும் பழனிசாமி தலைமையிலான அட்டைக்கத்தி வீரர்கள் உங்கள் வெற்று வீரத்தை திமுகவிடம் காட்டி, தொடர்ந்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 secs ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago