‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற என்.சங்கரய்யாவின் 101-வது பிறந்த நாள் விழா - தலைவர்கள் நேரில் வாழ்த்து

By செய்திப்பிரிவு

தாம்பரம்: விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்றவருமான என்.சங்கரய்யாவின் 101-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்றவருமான என்.சங்கரய்யா நேற்று (ஜூலை 15) 101-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதையொட்டி, சென்னை, குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் ஏ.கே.பத்மநாபன், டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் வே.ராஜசேகரன், ஆர்.வேல்முருகன், டி.ரவீந்திரன், சாமிநடராஜன், எஸ்.ஏ.பெருமாள், பா.ஜான்சிராணி உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வருக்கு வாழ்த்து செய்தி

தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ கருணாநிதி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், விரைந்து பூரண குணமடைய விருப்பம் தெரிவித்ததாக முதல்வரிடம் தெரிவிக்குமாறு அமைச்சர் அன்பரசனிடம், சங்கரய்யா கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு சங்கரய்யாவைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கடந்த காலத்தில் நடத்திய போராட்டங்கள், சிறை அனுபவங்கள், பயணங்கள், மாநாடுகள், கட்சியின் நிலைமைகள் குறித்து நினைவுகூர்ந்தனர்.

இதேபோல், பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் ட்விட்டரில் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனதுட்விட்டர் பதிவில் என்.சங்கரய்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘‘பொதுவுடைமைச் சிந்தனை எனும் கலங்கரை விளக்கத்தை அடுத்த தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் ‘தகைசால் தமிழர்’ சங்கரய்யாவுக்கு 101-வது பிறந்தநாளில் உங்களில் ஒருவனாக வாழ்த்துகளைப் பகிர்கிறேன். போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த அவர் இன்னும் பல்லாண்டு வாழ்க’’ என்று தெரி வித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE