நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கால் நீரில் மூழ்கிய வெள்ளலூர் தரைப்பாலம்

By செய்திப்பிரிவு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக, நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சிங்காநல்லூர் - வெள்ளலூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நொய்யல் நீராதார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் நேற்று சுற்றுலா பயணிகள் அருவிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அடிவாரத்தில் உள்ள சாடிவயல் சோதனை சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல, நொய்யலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என உள்ளாட்சி நிர்வாகத்தினரால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சித்திரைச் சாவடி அணையில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் பிரித்துவிடப்பட்டுள்ளதால், கோவை மாநகரில் உள்ள வாலாங்குளம், முத்தண்ணன் குளம், பெரிய குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சிக் குளம், கோளராம்பதி குளங்கள் நிரம்பி வருகின்றன.

சிங்காநல்லூர்- வெள்ளலூர் வழித்தடத்தில் நொய்யல் ஆற்றின் மீதுள்ள தரைப்பாலம் பழுதடைந்துள்ளதால் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அருகில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிக தரைப்பாலம் நேற்று காலை நீரில் மூழ்கியது.

இதனால் அவ்வழியாக வாகனப் போக்குவரத்து தடைபட்டது. இந்தப் பாலத்தை மேயர் கல்பனா ஆனந்த குமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர், நீரோட்டத்தின் வேகம் குறைந்ததால், மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது. அதன் பின்னர், வாகன ஓட்டுநர்கள் அந்தப் பாலத்தின் வழியாக சென்று வந்தனர்.

சிறுவாணி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர் மட்டம் நேற்று 36 அடியாக உயர்ந்தது. 25 கோடி லிட்டர் குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 100 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE