வேரோடு சாய்ந்த மரங்கள், மண் சரிவு, ஆரஞ்சு அலர்ட்... கனமழையால் தத்தளிக்கும் நீலகிரி - கள நிலவரம்

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூடலூரில் அதிகபட்சமாக 227 மி.மீ. மழை பதிவானது. அங்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்று, கன மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுகின்றன. சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டு தென்மேற்குப் பருவமழை நீலகிரியில் தாமதமாக தொடங்கினாலும், அதி தீவிரமாக பெய்து வருகிறது. உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் இடை விடாத பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அனைத்து அணைகளும் அசுர வேகத்தில் நிரம்பி வருகின்றன.

மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் கரை புரண்டு பாய்கிறது. ஆற்றைக் கடக்க பயன்படுத்தப்பட்டுவந்த தெப்பக்காடு பாலம் நீரில் மூழ்கியிருப்பதால் மக்கள் ஆற்றைக் கடக்க ஜே.சி.பி இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

முழுக் கொள்ளளவை எட்டிய குந்தா, கெத்தை ஆகிய அணைகளிலிருந்து உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர் அதிகாரிகள். பெரும்பாலான பள்ளிகளுக்கு இரண்டாவது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. நாளையும் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மற்றும் கன மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுகின்றன. சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.

மரங்கள் சாலைகளில் விழுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. உதகை ஹெச்பிஎஃப் சாலையின் குறுக்கே மரம் ஒன்று மின்கம்பி மற்றும் ஒரு காரின் மீது விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை-கூடலூர் சாலையில் காமராஜர் சாகர் அணை அருகே மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. நெஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றினர். உதகை எட்டினஸ் சாலை, படகு இல்லம், பிங்கர்போஸ்ட் பகுதிகளில் சாலைகளில் மரங்கள் விழுந்தன. இதில், மின்கம்பிகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

உதகையில் ஆட்சியர் அலுவலகம், செல்லும் சாலையில் ராட்சத மரம் சாலையோரத்தில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக நடந்த சென்ற பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் உயிர் தப்பினர். உதகை லவ்டேல் சாலை மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை-மஞ்சூர் சாலையில் பிக்கட்டி பாதகண்டி மண் சரிவு ஏற்பட்டது. இதை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.

இந்நிலையில், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரு தாலுக்காக்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பல பாலங்கள், சாலைகள், விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கூடலூர் நாயக்கமூலா பகுதியில் அஜந்தா சுரேஷ் என்பவரின் வீடு முன்பு மதில் சுவர் இடிந்து விழுந்தது. நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கூடலூர் காளம்புழா பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.

மீட்புப்பணிகளில் வருவாயத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையினால் பாதிக்கப்பட்ட மங்குழி பாலம், காலம்புழா பாலம் ஆகிய பகுதிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கோழிப்பாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நிவாரண முகாமை பார்வையிட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு துணிகள் மற்றும் மதிய உணவினை வழங்கினார்.

வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேட்டி

மேலும், கோழிப்பாலம் பேரிடர் மீட்பு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டார். அவர் கூறியது: ''மாவட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு பருவமழை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து, மழையினால் அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கப்பட்டுள்ளது.

கூடலூரில் 227 மி.மீ மழையும், தேவாலா, பந்தலூர், நடுவட்டம், அப்பர்பவானி, அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் அதிக அளவிலான மழை பெய்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பகுதிகளிலும் கால்வாய்களில் தூர்வாரப்பட்ட காரணத்தினால் மழைநீர் தங்கு தடையின்றி செல்கிறது. இதனால், பாதிப்புகள் குறைவான அளவில் ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், கூடலூர் வட்டத்துக்குட்பட்ட பகுதியில் பெய்த அதிக கனமழை பொழிவின் காரணத்தினால் மங்குழி பாலம், காலம்புழா பாலம் ஆகிய இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை பார்வையிடப்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக அரசுக்கு எடுத்து செல்லப்பட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், கோழிப்பாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நிவாரண முகாமில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு 3 குடும்பத்தை சார்ந்த 9 நபர்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும், நிலச்சரிவு அபாய பகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களது வீடுகளில் பாதுகாப்பு இன்மையை உணர்ந்தால் உடனடியாக அருகில் உள்ள முகாம்களில் தங்கிக் கொள்ள முன்வர வேண்டும்.

மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது அவசர உதவிக்காண கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1077-ல் மாவட்ட அவசர கால மையத்தை பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். கடந்த 1-ம் தேதி முதல் இன்று வரை தென்மேற்கு பருவ மழையினால் 1 உயிர் சேதமும், 6 நபர்களுக்கு காயங்களும் எற்பட்டுள்ளது.

45 வீடுகள் ஒரு பகுதி சேதமடைந்துள்ளன. 1 இடத்தில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. 35 இடங்களில் மரம் விழுந்துள்ளன. 3 இடங்களில் மண் சரிவும் 2 இடங்களில் தடுப்புச்சுவர்களும் இடிந்து விழுந்துள்ளன. இதில் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் சாலையில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.

மேலும் நமது மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வரும் பட்சத்தில், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, வனத்துறை, மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் காவல்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தோட்டக்கலைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் எந்தவித அச்சமும் பட வேண்டாம். அதிக கனமழை பொழிவு நேரத்தில், அத்தியாவசிய மற்றும் அவசிய பணிகளை தவிர்த்து பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்'' என்று அமைச்சர் தெரிவித்தார்.

கூடலூருக்கு ஆரஞ்சு அலர்ட்: கூடலூருக்கு ஆரஞ்சு அலர்ட்‌ அறிவிக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் தங்களது வீடுகளை விட்டு அனாவசியமாக வெளியே வராமல்‌ வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், மரங்களின்‌ அடியிலோ மற்றும்‌ தடுப்பு சுவர்களின்‌ அருகிலோ பொதுமக்கள்‌ தங்களது வாகனங்களை நிறுத்தாமல்‌ இருக்கவும்‌ காவல்துறை சார்பில்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூர்‌ மற்றும்‌ தேவாலா பகுதிகளில்‌ தென்மேற்கு பருவமழையின் தாக்கம்‌ அதிகமாக உள்ளதால்‌ பல இடங்களில்‌ நிலச்சரிவும்‌, சாலைகளில் மரங்களும்‌ விழுந்தவண்ணம்‌ உள்ளன. இன்று காலை முதல்‌ 11 இடங்களில்‌ மரங்கள்‌ விழுந்தும்‌, 4 இடங்களில்‌ சிறு சிறு மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில்‌ 3 இடங்களில்‌ பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில்‌ தங்க வைக்கப்பட்டுள்ளனர்‌.

இந்த பேரிடர்‌ காலத்தில்‌ காவல்‌ துறை, வருவாய்துறை, தீயணைப்பு மற்றும்‌ மீட்புத்துறை ஆகியோர்‌ மீட்புப்‌ பணியில்‌ ஈடுபட்டுள்ளனர்‌. இந்நிலையில்,‌ நீலகிரி மாவட்டம்‌. கூடலூர்‌ பகுதியில்‌ மழைப்பொழிவு அதிகமாக இருக்கும்‌ காரணத்தினால்‌ கூடலூர்‌ பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட்‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மழை பொழிவு தொடர்ந்து இன்னும்‌ சில நாட்களுக்கு தொடரும்‌ என்பதால்‌ நீலகிரி மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து பொது மக்களும்‌ முற்றிலும்‌ இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும். பகல்‌ நேரங்களில்‌ அதிக காற்றுடன் கூடிய மழை இருப்பதால்‌ தங்களது வீடுகளை விட்டு அனாவசியமாக வெளியே வராமல்‌ வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், மரங்களின்‌ அடியிலோ மற்றும்‌ தடுப்பு சுவர்களின்‌ அருகிலோ பொதுமக்கள்‌ தங்களது வாகனங்களை நிறுத்தாமல்‌ இருக்கவும்‌ காவல்துறை சார்பில்‌ அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் தங்களது பகுதிகளில்‌ ஏதேனும்‌ மரம்‌ விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது மண்சரிவு ஏற்பட்டாலோ பொதுமக்கள்‌ 0423-2223828 மற்றும்‌ 97808-00100 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

மழையளவு: மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கூடலூரில் அதிகபட்சமாக 227 மி.மீ., மழை பதிவானது. அவலாஞ்சியில் 195, அப்பர்பவானியில் 179, தேவாலாவில் 163, நடுவட்டத்தில் 147, பந்தலூரில் 123, கிளன்மார்கனில் 115, சேரங்கோட்டில் 89, குந்தாவில் 73, எமரால்டில் 63, ஓவேலியில் 52, பாலகொலாவில் 49, உதகையில் 45.3, பாடந்தொரையில் 32, கல்லட்டி 21.3, செருமுள்ளியில் 20, கேத்தியில் 18, கிண்ணக்கொரையில் 10, கெத்தை 9, மசினகுடியில் 8, குன்னூரில் 8, மி.மீ., மழை பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்