ஊரன் அடிகள் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: வள்ளலார் பெருந்தொண்டர் ஊரன் அடிகள் மறைவு சமயப் பற்றுடையோர்க்கு மட்டுமன்றி, சமய நல்லிணக்கத்தில் ஈடுபாடு கொண்ட அனைவருக்குமே ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில்," வள்ளலார் பெருந்தொண்டர் தவத்திரு ஊரன் அடிகள் உடல்நலக் குறைவால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மறைவுற்றார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறேன்.தவத்திரு ஊரன் அடிகள் திருச்சி மாவட்டம், நரசிங்கமங்கலத்தில் பிறந்தவர் என்றபோதிலும் துறவு வாழ்க்கை மேற்கொண்ட பின்னர் வடலூரையே தனது வாழ்விடமாக்கிக் கொண்டவர்.வடலூர் சன்மார்க்க நிலையங்களில் 25 ஆண்டுகளுக்கு மேல் அறங்காவலர் முதலிய பல நிலைகளில் பணியாற்றியவர் ஊரன் அடிகள்.

22 வயதிலேயே சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் நிறுவியதுடன் எண்பதுக்கும் மேற்பட்ட சமய ஆராய்ச்சி நூல்களை எழுதியும் பதிப்பித்தும் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். நூலாசிரியராக மட்டுமின்றி உரையாசிரியராகவும் சொற்பொழிவாளராகவும் நிலைத்த புகழை ஈட்டியவர். மறைந்த முதல்வர் கருணாநிதி மீதும், என் மீதும் மிகுந்த பற்றும் மதிப்பும் கொண்டிருந்தார் ஊரன் அடிகள்.

அன்னாரது மறைவு சமயப் பற்றுடையோர்க்கு மட்டுமன்றி, சமய நல்லிணக்கத்தில் ஈடுபாடு கொண்ட அனைவருக்குமே ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE