குடும்ப வன்முறை வழக்குகளை குற்றவியல் வழக்காகவே விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: குடும்ப வன்முறை தடுப்பு சட்ட வழக்குககளை குற்றவியல் வழக்காகவே விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

குடும்ப வன்முறை தடுப்பு சட்டப் பிரிவு வழக்குகள் குற்றவியல் வழக்குகளாக கருதப்பட்டு குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்குகளை உரிமையியல் வழக்குகளாக கருத வேண்டும் என உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஒருவர் உத்தரவிட்டார். மற்றொரு தனி நீதிபதி குற்றவியல் வழக்குகளாக கருத வேண்டும் என உத்தரவிட்டார். பல மாநில உயர் நீதிமன்றங்கள், குடும்ப வன்முறை தடுப்பு சட்ட வழக்குகளை குற்றவியல் வழக்காக கருத வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, குற்றவியல் வழக்கா, உரிமையியல் வழக்கா என்பதனை முடிவு செய்ய வழக்கு விசாரணை இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதன்படி குடும்ப வன்முறை தடுப்பு சட்ட வழக்குகளை நீதிபதி டி.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அமர்வு விசாரித்தது. வழக்கறிஞர்கள் ராபர்ட் சந்திரகுமார், பினேகாஸ் வாதிட்டனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், உயர் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்கலாகும் வழக்குகளை குற்றவியல் வழக்காகவே விசாரிக்க வேண்டும், குடும்ப வன்முறை புகார் அளிக்க கால வரம்பு இல்லை.

கீழமை நீதிமன்றத்தில் குடும்ப நல நீதிமன்றம் அல்லது உரிமையியல் நீதிமன்றம் அல்லது நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரிக்க வேண்டுமா என்பதை பாதிக்கப்பட்டவர் முடிவு செய்து கொள்ளலாம். இந்த உத்தரவின் அடிப்படையில் குடும்ப வன்முறை தடுப்பு சட்ட வழக்குகளை சம்பந்தப்பட்ட தனி நீதிபதி முன்பு பதிவுத்துறை பட்டியலிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE