தனியார் சிமென்ட் ஆலையை கண்டித்து கோவில்பட்டியில் கிராம மக்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

புதூர் வட்டாரம் மேல வெங்கடாசலபுரம் கிராமம் அருகே தனியார் சிமென்ட் ஆலையை கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் தலைமை வகித்தார். பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் அளித்த மனு விவரம்:

மேல வெங்கடாசலபுரம், சிவலார்பட்டி, கம்பத்துப்பட்டி, எல்.வி.புரம், மேல அருணாசலபுரம், மணியக்காரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 1974-ம் ஆண்டு தனியார் சிமென்ட் நிறுவனத்தினர் விவசாயிகளிடம் நிலங்களை விலைக்கு வாங்கினர். 1984-ம்ஆண்டு முதல் அந்த நிலங்களில் இருந்து சிமென்ட் தயாரிக்க பயன்படும் சுண்ணாம்பு கல் எடுப்பதற்காக மேலடுக்கில் உள்ள கரம்பை மண்ணை அப்புறப்படுத்திவிட்டு, சுமார் 150 அடி ஆழம் வரை பாறையை அதிசக்தி வாய்ந்த வெடி மருந்துகளால் பிளந்து சுண்ணாம்பு கற்களை தோண்டி எடுக்கின்றனர்.

மேல வெங்கடாசலபுரம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் 100-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் இருந்தன. இங்கிருந்த அரசுப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்டோர் படித்தனர். இங்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கமும் செயல்பட்டு வந்தது.

ஆனால், குவாரியில் வெடி வைக்கப்படும் சத்தத்தால் 10-க்கும்குறைவான விவசாய குடும்பங்களே உள்ளன. மற்றவர்கள் புலம் பெயர்ந்து சென்று விட்டனர். இந்த குவாரியால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்து விட்டன. ஆலை நிர்வாகத்தின் மூலம் எங்கள் கிராமத்துக்கு தேவையான அடிப்படை பணிகளை செய்ய வேண்டும்.

கிராமத்தின் அருகே செயல்படும் குவாரியை நிறுத்த வேண்டும். பெருமாள் கோயில் நிலத்தில் முறையான ஒப்பந்தமின்றி குவாரி அமைத்ததற்கு தகுந்த அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE