’மனு கொடுத்த பெண்ணை தலையில் அடித்த வருவாய்துறை அமைச்சர்’ - டிடிவி தினகரன் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: "கோரிக்கையை நிறைவேற்றித்தரக் கேட்டு மனு கொடுத்த பெண்ணை, தமிழக வருவாய் துறை அமைச்சர் தலையில் அடித்து விரட்ட முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோரிக்கையை நிறைவேற்றித்தரக் கேட்டு மனு கொடுத்த பெண்ணை, தமிழக வருவாய் துறை அமைச்சர் தலையில் அடித்துவிரட்ட முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அந்தக் காணொளியை பார்த்தபோது, ஓர் அமைச்சரே இப்படி நடந்து கொண்டால் மக்கள் எப்படி முன்வந்து ஆட்சியாளர்களிடம் குறைகளைத் தெரிவிப்பார்கள்?

திமுக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளை சாதிப் பெயர் சொல்லித் திட்டுவதும், மனு கொடுக்க வந்தவர்களை தலையில் அடித்தி விரட்டுவதும்தான் மேடைக்கு மேடை திரு.ஸ்டாலின் முழங்கி வரும் திராவிட மாடல் போலும்!?" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன் கலந்துகொண்டார். அப்போது பாலவனத்தம் கிராமத்தில் அமைச்சரிடம் மனு அளித்த பெண்ணை, அமைச்சர் தனது கையில் வைத்திருந்த அழைப்பிதழைக் கொண்டு தலையில் அடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE