மேட்டூர் அணைக்கு 90,873 கன அடியாக நீர் வரத்து அதிகரிப்பு: 68-வது முறையாக 100 அடியை எட்டிய நீர் மட்டம்

By வி.சீனிவாசன்

மேட்டூர்: காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்துவரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 90,873 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அணை நீர்மட்டம் 102.10 அடியாக உயர்ந்துள்ளது.

90 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து: கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்துவரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று 8010 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று ஒரே நாளில் 90873 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் காவிரி டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும், நீர் திறப்பு குறைவாக உள்ளதால், அணை நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணை நீர் மட்டம் நேற்று 98 அடியாக இருந்தது, இன்று மாலை 4 மணி நிலவரப்படி 102.10 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 67.59 டிஎம்சி-யாக உள்ளது.

68வது முறையாக 100 அடியை தொட்ட மேட்டூர் அணை: கடந்த ஒரு மாதமாக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 2500 கன அடிக்கும் கீழ் சரிந்தது. டெல்டா பாசன தேவைக்காக 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணை நீர் மட்டம் தொடர்ந்து சரிந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 24ம் தேதி 100 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர் மட்டம், 257 நாட்களுக்கு பிறகு கடந்த 8ம் தேதி 100 அடிக்கு கீழே சரிந்தது. மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து 68வது முறையாக இன்று அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது.

பாதுகாப்பான இடங்களுக்கு மீனவர்கள் வெளியேற அறிவுறுத்தல்: ''ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைக்கு 90 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து உள்ள நிலையில், தருமபுரி - சேலம் இடையிலான காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, காவிரி கரையோரம் வசிக்கும் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். காவிரி ஆற்றில் நீரின் ஓட்டம் அதிகரித்துள்ள நிலையில், கோட்டையூர், அடிப்பாலாறு பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்க ஆற்றுக்கு செல்லவில்லை. ஆற்றங்கரையோரம் யாரும் செல்ல வேண்டாம் என்றும் செல்ஃபி எடுக்கவோ, குளிக்கவோ கூடாது'' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE