ஜெயலலிதா, சசிகலா, ஓபிஎஸ்-க்கு துரோகம் செய்தவர் இபிஎஸ்: வைத்திலிங்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: "அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது. எனவே அவற்றை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று, தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளதாக, அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் இந்த கட்சியை ஆரம்பித்தபோது, இயற்றிய சட்டவிதிகளின்படி, அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில்தான், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஒரு வாக்கின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.இதனை பொதுக்குழு நீக்க முடியாது. எனவே நேற்று பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது. இன்றுவரை தேர்தல் ஆணையத்தில், ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம்தான். எனவே பொதுக்குழு தீர்மானங்கள் எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது. எனவே அவற்றை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று, தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர். இனிமேல் கட்சியில் பொதுச் செயலாளர் என்ற பதவியே இல்லை. எனவே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர், ஓபிஎஸ் மீது குற்றம்சுமத்துவது ஏற்புடையதாக இல்லை. எப்படி இவரை முதல்வராக்கிய சசிகலாவுக்கு துரோகம் செய்தார். இவர் ஆட்சி செய்ய நான்கரை ஆண்டுகாலம் உறுதுணையாக இருந்த ஓபிஎஸ்க்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்கிறார்.

ஓபிஎஸ் கட்சி அலுவலகத்திற்கு செல்கிறார். நாங்கள் இந்தியன் வங்கி அருகே செல்லும்போதே, கற்கள், பாட்டில், அருவா, கட்டைகளை வீசுகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினர், கடந்த 5 நாட்களாக ரவுடிகளை கட்சி அலுவலகத்தில் வைத்து அட்டூழியம் செய்தது. எனவே எங்களை குறை சொல்வதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE