கிலோ ரூ.5-க்கு கூட வாங்க ஆளில்லை - முருங்கைக்காயை விற்க முடியாமல் வேதனை

By செய்திப்பிரிவு

முருங்கைக்காய் கிலோ ரூ.5-க்கு கூட வியாபாரிகள் வாங்க முன் வராததால், அதிகம் மகசூலான முருங்கைக்காயை விற்பனை செய்ய முடியாமல் திருவோணம் பகுதிவிவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திருவோணம் பகுதியில் நெல்லுக்கு மாற்றாக முருங்கைக்காய் செடிகளைப் பயிரிட தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

இதையடுத்து, திருவோணம் பகுதியில் சிவவிடுதி, வெட்டிக்காடு, ஒக்கநாடு கீழையூர் போன்ற இடங்களில் மேட்டுப்பாங்கான பகுதிகளில் விவசாயிகள் முருங்கை சாகுபடியில் ஈடுபட்டனர்.

இந்த பகுதியில் 200 ஏக்கரில்சாகுபடி செய்யப்பட்ட முருங்கையில் தற்போது அதிகளவில் காய்கள் காய்த்துள்ளன. நாள்தோறும் 2 டன் எடை முருங்கைக்காய்களை விவசாயிகள் அறுவடை செய்யும் அளவுக்கு அதிக மகசூல் கிடைத்துள்ளது.

ஆனால், தற்போது முருங்கைக்காய்க்கு போதிய விலை இல்லை எனக் கூறி, வியாபாரிகள் முருங்கைக்காயை கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர். இதனால், முருங்கைக்காய் அறுவடை செய்யப்படாமல், மரத்திலேயே காய்ந்துவருகிறது. அதிகம் விளைந்தும் விற்க முடியாததால் முருங்கை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சிவவிடுதி விவசாயி கே.ஆர்.ராமசாமி கூறும்போது, ‘‘மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்கத் தோட்டக்கலைத் துறையினர் எங்களை அணுகி ஆலோசனை வழங்கினர். நாங்களும் முருங்கைச் செடிகளைக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புநட்டுப் பராமரித்து, ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் செலவு செய்தோம். அதிகளவில் விளைந்த முருங்கைக்காய்களை தற்போது அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில், இவற்றை வாங்க வியாபாரிகள் முன்வராததால், நாங்கள் முருங்கை காய்களைப் பறிக்க முடியாமல் அவதிப்படுகிறோம்.

தோட்டக்கலைத் துறையினரிடம் தகவல் கொடுத்தோம், அவர்கள் சில வியாபாரிகளை அணுகுமாறு கூறினர்.

ஆனால், வியாபாரிகள் முருங்கைக் காய்களைப் பறித்து எங்களிடம் கொண்டு வந்து கொடுத்தால், அவற்றை விற்றபின் பணம் தருகிறோம் எனக் கூறுகின்றனர். அதேநேரத்தில் வண்டி வாடகை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு கணக்குப் பார்த்தால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே, இப்பகுதியில் பயிரிட்டுள்ள முருங்கைக்காய்களை கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘முருங்கைக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், எங்களிடம் காய்களை பறித்து விற்க முடியாத நிலையைத் தெரிவித்தனர்.

நாங்களும் சில வியாபாரிகளை அணுகியுள்ளோம். விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE