ரயில்களில் சாதாரண பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு; ஏழைகளுக்கு எதிரான செயல்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: " தொடர்வண்டிகளில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து, கட்டணத்தை மறைமுகமாக உயர்த்துவதன் மூலம், ஏழைகள் தொடர்வண்டிகளில் பயணிக்கும் உரிமை பறிக்கப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நீண்ட தொலைவுக்கு இயக்கப்படும் அதிவிரைவுத் தொடர்வண்டிகளில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை 2 ஆகவும், முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை 3 ஆகவும் குறைக்க இந்திய தொடர்வண்டி வாரியம் ஆணையிட்டிருக்கிறது. சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து, கட்டணத்தை மறைமுகமாக உயர்த்துவதன் மூலம், ஏழைகள் தொடர்வண்டிகளில் பயணிக்கும் உரிமை பறிக்கப்படுகிறது; இது கண்டிக்கத்தக்கதாகும்.

சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அதிவிரைவுத் தொடர்வண்டிகளில் இப்போது சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் 7, ஏ.சி. மூன்றாம் வகுப்பு பெட்டிகள் 6, ஏ.சி. இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2, முன்பதிவு இல்லா பெட்டிகள் 5 என மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தப் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்காத தொடர்வண்டி வாரியம், சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை 2 ஆகவும், முன்பதிவு இல்லா பெட்டிகளை 3 ஆகவும் குறைக்க அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஏ.சி. மூன்றாம் வகுப்பு பெட்டிகளை 10 ஆகவும், ஏ.சி. இரண்டாம் வகுப்பு பெட்டிகளை 4 ஆகவும் உயர்த்த வேண்டும்; ஏ.சி. முதல் வகுப்பு பெட்டி ஒன்றை அனைத்து வண்டிகளிலும் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது ஏழைகளுக்கு எதிரான செயலாகும்.

இந்திய தொடர்வண்டி வாரியத்தின் ஆணை செயல்பாட்டுக்கு வரும் போது, சாதாரண படுக்கை பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 546-லிருந்து 156 ஆக குறையும். முன்பதிவு இல்லாத ஒரு பெட்டியில் 100 பேர் பயணிப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு தொடர்வண்டியில் முன்பதிவு செய்யாமல் பயணிப்போர் எண்ணிக்கை 500-லிருந்து 300 ஆக குறையும். மொத்தமாக ஒரு தொடர்வண்டியில் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வாய்ப்பு 590 ஏழைப் பயணிகளுக்கு மறுக்கப்படுகிறது. இது மிகப்பெரிய உரிமை பறிப்பாகும்.

அதிவிரைவுத் தொடர்வண்டிகளில் சாதாரண படுக்கை வசதி பெட்டியில் வசூலிக்கப்படும் கட்டணம், பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மிகவும் குறைவு ஆகும். முன்பதிவு இல்லா பெட்டிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் இன்னும் குறைவு ஆகும். இதன் காரணமாகவே நீண்ட தூரம் செல்லும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பேருந்து பயணத்தை தவிர்த்து விட்டு, தொடர்வண்டிகளில் பயணம் செய்கின்றனர்.

புதிய திட்டத்தின்படி சாதாரண படுக்கை பெட்டிகள், முன்பதிவு இல்லா பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் போது, நீண்ட தூரம் செல்லும் அனைவரும் ஏ.சி. பெட்டிகளில் தான் பயணிக்க வேண்டும். இதற்காக அவர்கள் பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக சென்னை - மதுரை இடையே பாண்டியன் விரைவுத் தொடர்வண்டியில் பயணிக்க முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ரூ.160, சாதாரண படுக்கை வகுப்பில் ரூ.323 மட்டும் தான் கட்டணம். மாறாக மூன்றாம் வகுப்பு ஏ.சி பெட்டியில் சாதாரண வகுப்பை விட ரூ. 512, அதாவது இரண்டரை மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

இரண்டாம் வகுப்பு ஏ.சிக்கு சுமார் 4 மடங்கும் (ரூ.1,170), முதலாம் வகுப்பு ஏ.சிக்கு 6 மடங்கும் (ரூ. 1960) கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இவ்வளவு கட்டணத்தை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் செலுத்த முடியாது. அதனால், தொடர்வண்டிகளில் பயணிக்கும் உரிமை அவர்களிடமிருந்து பறிக்கப்படும். வசதி படைத்தவர்கள் மட்டும் தான் தொடர்வண்டிகளில் பயணிக்க முடியும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தொடர்வண்டிகளில் குறைந்த கட்டண வகுப்பு பெட்டிகளை குறைப்பதற்காக தொடர்வண்டி வாரியம் கூறியுள்ள காரணம் பொருத்தமற்றது. தொடர்வண்டிகளின் வேகத்தை இப்போதுள்ள மணிக்கு 110 கி.மீ என்ற அளவிலிருந்து 130 கி.மீ ஆக உயர்த்தவிருப்பதாகவும், அதற்காகவே பெட்டிகளின் வகைகளில் மாற்றம் செய்யப்படுவதாகவும் தொடர்வண்டி வாரியம் கூறியிருக்கிறது. இந்த இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

தொடர்வண்டிகளின் வேகத்தை அதிகரிக்கும் நோக்குடன் வழக்கமான பெட்டிகளுக்கு பதிலாக ஜெர்மனி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எல்.எச்.பி பெட்டிகள் அதிவிரைவு தொடர்வண்டிகளில் இணைக்கப் பட்டுள்ளன. வேகத்தை அதிகரிக்க இதுவே போதுமானது. இந்தப் பெட்டிகள் ஏ.சி வகுப்பு பெட்டிகளாகத் தான் இருக்க வேண்டும்; சாதாரண படுக்கை வகுப்பு பெட்டிகளாக இருக்கக் கூடாது என எந்த கட்டுப்பாடும் இல்லை. மாறாக, சாதாரண படுக்கை பெட்டிகள் இல்லாமல் ஏ.சி. பெட்டிகளை மட்டும் இயக்குவதன் மூலம் மட்டும் தான் தொடர்வண்டிகளை லாபத்தில் இயக்க முடியும் என்று பல்வேறு வல்லுனர் குழுக்கள் அளித்த பரிந்துரைப்படி தான், மறைமுகமான கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்கும் நோக்குடன், இப்படி ஒரு முடிவை தொடர்வண்டி வாரியம் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இது பெருந்தவறு.

இந்தியா போன்ற ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் வாழும் நாடுகளில், தொடர்வண்டித்துறையின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வதாகத் தான் இருக்க வேண்டுமே தவிர, லாபம் ஈட்டுவதாக இருக்க முடியாது. தொடர்வண்டித்துறை அமைச்சராக லாலு பிரசாத்தும், இணை அமைச்சராக பாட்டாளி மக்கள் கட்சியின் அரங்க.வேலுவும் இருந்த போது மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் தொடர்வண்டித்துறை ரூ.61,000 கோடி கடனை அடைத்ததுடன், ரூ.89,000 கோடி உபரி நிதியையும் சேர்த்தது. அதன்பயனாக இந்திய வரலாற்றில் முதன்முறையாக தொடர்வண்டி கட்டணங்கள் குறைக்கப்பட்டன. தொடர்வண்டித்துறை சீர்த்திருத்தங்கள் அது போன்று தான் இருக்க வேண்டுமே தவிர ஏழைகளை விரட்டுவதாக இருக்கக்கூடாது.

எனவே, தொடர்வண்டிகளில் சாதாரண படுக்கை பெட்டிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை தொடர்வண்டி வாரியம் கைவிட வேண்டும். இப்போதுள்ள பெட்டிகள், இப்போதுள்ள கட்டண விகிதத்திலேயே அதிவிரைவு தொடர்வண்டிகளை இயக்கி, அவற்றில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வழக்கம் போல பயணிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்