கடலூர் எம்எல்ஏ மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: துரைமுருகன் அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

சென்னை: திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்ட கடலூர் தொகுதி எம்எல்ஏ கோ.அய்யப்பன் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. இதற்கிடையே, கடலூர் மாநகராட்சி மேயருக்கான மறைமுகத் தேர்தலில், கட்சித் தலைமை அறிவித்த சுந்தரிக்கு எதிராக, கடலூர் தொகுதி எம்எல்ஏ, கோ.அய்யப்பன், கவுன்சிலர்களைத் திரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வருத்தம் தெரிவிப்பு இந்த விவகாரத்தில் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவிப்பின்படி, அய்யப்பன் கடந்த மார்ச் மாதம் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் பாஜகவில் சேரப்போவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், அய்யப்பன் மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கட்சிப் பணியாற்ற அனுமதிக்கும்படி தலைவரிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, இன்றுமுதல் திமுக உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE