வேப்பனப்பள்ளி அருகே அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானை

By செய்திப்பிரிவு

வேப்பனப்பள்ளி அருகே அரசுப் பள்ளியின் சுற்றுச் சுவரை யானை இடித்து சேதப்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப் பள்ளி அருகே கர்நாடக மாநிலத்தையொட்டியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரத்தில் யானைகள் கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், இக்கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றையானை, நேற்று முன்தினம் இரவு அளேகுந்தாணி கிராமத்துக்குள் புகுந்தது. பின்னர், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சுற்றுச் சுவரை முட்டித் தள்ளி சேதப்படுத்தியது.

மேலும், பள்ளியின் உள்ளே இருந்த வாழை மரத்தையும் சேதப்படுத்தியது. சிறிது நேரம் வரை அங்கிருந்த யானை மீண்டும் காட்டுக்குள் சென்றது. காட்டுக்குள் செல்லும் வழியில் விளை நிலத்தை சுற்றி பதிக்கப்பட்டிருந்த வேலி கற்களையும் சேதப்படுத்தியது. இதனால், கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும், யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து ஊருக்கு வராமல் தடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தக்காளி, முட்டைகோஸ்

இதேபோல, சூளகிரி அடுத்த சின்னகுத்தி கிராமத்துக்குள் புகுந்த 4 யானைகள் விளை நிலங்களில் பயிரிட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ் பயிர்களை சேதப்படுத்தியது. மேலும், நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களையும் சேதப்படுத்தியது.

இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, “இப்பகுதி யில் முகாமிட்டுள்ள 4 யானைகள் விளை நிலங்களில் புகுந்து சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பயிர்களை சேதப்படுத்தின.வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE