புதுக்கோட்டை: அதிமுக இடைக்காக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ''நிஜத்தை தொலைத்தவர்களை நம்பி ஒரு குதிரை கூட செல்லாது'' என்று உருவகக் கதை ஒன்றை சொல்லி விமர்சனம் செய்துள்ளார் வி.கே.சசிகலா.
அதிமுகவில் தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக பணபலம், படைபலத்தைக் கொண்டு பதவியை பிடிக்க நினைப்போரை நிராகரிக்கும் காலம் வந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இன்று (ஜூலை 11) நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்ட அமமுக நிர்வாகியின் திருமணத்தை நடத்தி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''வழக்கு நிலுவையில் இருக்கும்போது பொதுச் செயலாளர் தேர்வு குறித்து கூட்டம் நடத்தியதே தவறானது. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளரானதே கேள்விக்குறியாக இருக்கும்போது ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது எப்படி செல்லும்?
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதற்கு கழக தொண்டர்கள் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள்.
தற்போது அதிமுகவில் நடந்ததைப் போன்று திமுகவில் தொண்டர்களுக்கு மாறாக நடந்த ஒரு சம்பவத்தினால்தான் எம்ஜிஆர் தனிக் கட்சியை தொடங்கினார். அதுமட்டுமின்றி தொண்டர்களால்தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முறை கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த முறை பின்பற்றப்படவில்லை.
‘அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதை அதிமுக தொண்டர்களும் விரும்பவில்லை. அதிமுகவுக்கு வாக்களித்த பொதுமக்களும் விரும்பவில்லை.
என்னை நாடி ஓ.பன்னீர்செல்வம் வந்தால் அதைப் பற்றி காலச் சூழ்நிலைக்கு ஏற்பதான் முடிவு எடுக்க முடியும். ஒட்டுமொத்த தொண்டர்களின் குரல்தான் இறுதியானது. அதுதான் வெற்றி பெறும். ஜெயலலிதா காலத்தில் நானும் பல பொதுக்குழுக்களுக்கு சென்றிருக்கிறேன். கட்சியின் வரவு செலவு அறிக்கையை பொருளாளர்தான் வாசிக்க முடியும். அப்படி இருக்கும்போது தற்போது வேறொருவர் வாசித்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.
கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் என்னைத்தான் (சசிகலா) ஆதரிக்கிறார்கள். நான் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போது உணர்ந்திருக்கிறேன். நான் இல்லாத சமயத்தில், மனஸ்தாபத்தினால் அதிமுகவில் சிலர் பிரிந்து இருந்திருக்கலாம். அவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரே அதிமுகவை உருவாக்கி வெற்றியை பெறுவோம். தமிழகத்தில் ஆட்சியை அமைப்போம்'' என்றார்.
திருமண விழாவில் பேச்சு: இதற்கு முன்பாக திருமணத்தை நடத்தி வைத்து அவர் பேசியது: ''தற்போதைய சூழ்நிலையை பார்க்கும்போது கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது. கட்சித் தொண்டர்கள் அனைவரும் சுயநல வாதிகளைவிட்டு விலகும் காலம் வந்துவிட்டது. அதிமுகவின் சட்ட விதிப்படி கட்சியின் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரால்தான் கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல முடியும்.
அப்படி இல்லாமல் பணபலம், படைபலத்தைக் கொண்டு பதவியை பிடிக்கலாம் என்று நினைக்கும்போது அதை நிராகரிக்கிற காலம் வந்துவிட்டது. அதிமுக பொதுச்செயலாளராக நான் குறிப்பிட விரும்புவது, இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை,
குட்டிக் கதை:
ஒரு பாலைவனத்தில் குதிரையை ஓட்டி சென்ற வேலைக்காரரும், அதில் சென்ற பயணியும் குதிரையின் நிழலுக்காக அடித்துக்கொண்டனர். இதைக் கவனித்த குதிரை, தன்னை வளர்த்தவரிடமே திரும்பி வந்தது. நிஜத்தை மறந்து, நிழலுக்காக சண்டையிடுவோரின் கதை இதுதான். இதன் மூலம் நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை தொலைத்தவர்களை நம்பி ஒரு குதிரை கூட செல்லாது என்பதுதான் நிதர்சனம் என்று குட்டிக்கதை கூறினார்.
இணைப்பு விழாவுக்கு முன்பே இணைந்த திவாகரன்:
தஞ்சாவூரில் இன்று (ஜூலை 12) சசிகலா தலைமையிலான அதிமுகவில் அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழை நடைபெறும் என அக்கழகத்தின் நிறுவனர் திவாகரன் அறிவித்திருந்தார். இதற்கிடையில், கறம்பக்குடியில் நடைபெற்ற விழாவில் சகிகலாவோடு, திவாகரனும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago