அதிமுக சண்டைக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “அதிமுக சண்டைக்கும், திமுகவுக்கும் தொடர்பில்லை” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.‌ இதற்கிடையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்த வன்முறை காரணமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145-வது பிரிவின் கீழ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்தச் சூழலில் அதிமுகவில் நடக்கும் சண்டைக்கு திமுக தான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். அதேவேளையில், அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுகவின் கைக்கூலியாக பன்னீர்செல்வம் செயல்படுகிறார். எங்களின் கட்சியில் பிளவு ஏற்படுத்த நினைத்த மு.க.ஸ்டாலினுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்” என்று சாடினார்.

இதுகுறித்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் வீணாக திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம். இபிஎஸ் பொதுக்குழுவை எப்படி கூட்டினார் என்பது அனைவருக்கும் தெரியும். பொதுக்குழுவுக்காக இபிஎஸ் நிறைய பணம் செலவழித்துள்ளார்.

அதிமுகவில் நடக்கும் சண்டைக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை. எதற்கெடுத்தாலும் திமுகவையும், முதல்வரையும் தாக்கி பேசுவது இபிஎஸ்ஸுக்கு வழக்கமாகிவிட்டது.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை வரும்போது அரசு செய்ய வேண்டிய கடமை உள்ளது. அதனைத்தான் திமுக செய்துள்ளது.

நீதிமன்றத்துக்கு சென்று அதிமுக அலுவலகம் யாருக்கு என்பதை நிரூபிக்கட்டும். அதிமுக என்பது உடைந்த கண்ணாடி. அதனை ஒட்டவைக்க முடியாது. பொறுந்திருந்துப் பாருங்கள் என்ன நடக்கிறது என்று” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE