அரசு நிலத்தை அறக்கட்டளைக்கு விற்பனை செய்ததில் ரூ.50 கோடி மோசடி: திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: அரசு நிலத்தை அறக்கட்டளைக்கு விற்பனை செய்ததில் ரூ.50 கோடி மோசடி செய்தது குறித்து விசாரிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் குளம் பாதுகாப்பு குழுவினர் புகார் அளித்துள்ளனர்.

அரசு நிலத்தை விற்பனை செய்ததில் ரூ.50 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சு.வினீத் தலைமையில் இன்று நடந்ததில், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் ஈசன் முருகசாமி, சண்முகசுந்தரம், தாமோதரன் மற்றும் பலர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ''ஊத்துக்குளி வட்டம் சர்க்கார் பெரியபாளையம் கிராமத்தில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. இந்த குளம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குளமாகும். 440 ஏக்கரில் பரந்து விரிந்து நல்லாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு பல நூற்றாண்டுகளாக பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன்பெற்று வருகிறது.

தற்போது தமிழக அரசால் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தின் கரையில் சர்க்கார் பெரியபாளையம் கிராமத்தில் உள்ள 8.90 ஏக்கர் நிலம், நஞ்சராயன் குளத்தின் கரையில் இருந்து குளத்துப்பாளையம் சாலை வரை அமைந்துள்ளது. இந்த நிலத்துக்கு இடையில் குளத்தின் இருகரைகளிலும் இருந்து, நீர் செல்வதற்காக நீர்வழி பாதையும் உள்ளது. இந்த நிலத்தின் அன்றைய மதிப்பு ரூ.50 கோடி.

ஆனால் தமிழக அரசின் உத்தரவின் பேரில், இந்த நிலத்தை மதிப்பீடு செய்யும் போது, ரூ.1.50 கோடி மட்டுமே நிலத்தை மதிப்பீடு செய்து, பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில் பதவியில் இருந்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தனியார் அறக்கட்டளை அறங்காவலர்களுக்கு தொடர்பு உள்ளது. இந்த நிலம் 3 புறமும் ஓடை புறம்போக்கு சூழப்பட்டு உள்ளதாலும், குளக்கரையில் உள்ளதாலும் மேற்படி நிலம் ஓடை புறம்போக்கு என வகைப்பாடு செய்ய உகந்த நிலமாகும்.

எனவே ரூ.50 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை, ரூ.1.50 கோடிக்கு தனியார் பள்ளியை நடத்தி வரும், அறக்கட்டளைக்கு விற்பனை செய்தததில் ரூ.50 கோடி ஊழலில் ஈடுபட்ட முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, முன்னாள் நில நிர்வாக ஆணையர் பங்கஜ்குமார் பன்சால் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களாக பணிபுரிந்த கோவிந்தராஜன், விஜயகார்த்திகேயன் ஆகியோர் வரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க பரிந்துரைக்க வேண்டும்.

அதிகார வரம்பு மீறல் குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும். மேற்படி நிலத்தை நீர்நிலை புறம்போக்கு வகைப்பாடு செய்து காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

மனுவை பெற்ற ஆட்சியர், ''இந்த புகார் தொடர்பாக, இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறேன்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்