வானகரம் நோக்கி இபிஎஸ்; தலைமைக் கழகம் செல்லும் ஓபிஎஸ்: ஆதரவாளர்கள் மோதலால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இபிஎஸ் வானகரம் புறப்பட்டுச் சென்ற நிலையில், பொருளாளர் ஓபிஎஸ் தலைமைக் கழகத்திற்கு புறப்பட்டார். ஓபிஎஸ் அவரது பிரச்சார வாகனத்தில் அங்கு செல்கிறார். வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

9 மணிக்கு தீர்ப்பு: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் தீர்ப்பு இன்று (ஜூலை 11) காலை 9 மணிக்கு வெளியாகிறது. இதனிடையே, வானகரத்தில் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதில், பொதுச்செயலாளர் நியமனம் உள்ளிட்ட 16 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி வானகரம் புறப்பட்டுச் சென்றார். வானகரம் மண்டபத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பிரத்யேக க்யூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அட்டைகள் உள்ளவர்கள் ஸ்கேனர்கள் அமைக்கப்பட்ட பாதை வழியாக சோதனை செய்யப்பட்டே மண்டபத்துக்குள் அனுப்பப்படுகின்றனர்.

கட்சி அலுவலகத்தில் மோதல்: இந்நிலையில் ஓபிஎஸ் அதிமுக தலைமைக் கழகத்திற்கு புறப்பட்டார். இதற்கிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக தலைமைக் கழகத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தலைமை அலுவலகம் நோக்கி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவரது வாகனத்தை கட்சி அலுவலகத்திற்குள் நுழையவிடாமல் வாயிலை வழிமறித்து அமர்ந்துள்ளனர். அங்கு பதற்றமான சூழலே நிலவி வருகிறது. கூடுதல் காவல்துறையினர் அங்கே அனுப்பிவைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

பொதுக்குழு தீர்ப்பை எதிர்பார்த்தே ஓபிஎஸ் தலைமை அலுவலகத்திற்கு வருவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE