சென்னையில் தீவிர தூய்மைப் பணி: 600 மெட்ரிக் டன் திட, கட்டிட கழிவுகள் அகற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: தீவிர தூய்மைப் பணியின் மூலம் சென்னையில் 600 மெட்ரிக் டன் திட, கட்டிட கழிவு அகற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளிலும் தீவிர தூய்மைப் பணி கடந்த 9-ம் தேதி பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

தீவிர தூய்மைப் பணிகளில் 283 பேருந்து நிறுத்தங்களில் 3.37 மெட்ரிக் டன் உலர் கழிவுகள், 128 பூங்காக்களில் 14.86 மெட்ரிக் டன், 75 வழிபாட்டு தலங்களில் 4.63 மெட்ரிக் டன், 37 ரயில் நிலையங்களின் வெளிப்பகுதிகளில் 6.48 மெட்ரிக் டன், 54 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளில் 7.88 மெட்ரிக் டன், மாநகராட்சி மயான பூமிகள் அமைந்துள்ள 53 இடங்களில் 19.67 மெட்ரிக் டன் மற்றும் இதர 28 இடங்களில் சுமார் 48.04 மெட்ரிக் டன் என மொத்தம் 104.93 மெட்ரிக் டன் உலர் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இதேபோன்று, கட்டிடக்கழிவு கொட்டப்பட்டுள்ள 63 இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் இருந்து 452.39 மெட்ரிக் டன் கட்டிடக்கழிவு அகற்றப்பட்டுள்ளது.

மருத்துவமனை மற்றும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் 78 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப் பணியில் 52.02 மெட்ரிக் டன் அளவிலான திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்த தீவிர தூய்மைப் பணியின் போது மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 19,082 குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று 82,411 பேரைச் சந்தித்து குப்பையை மக்கும், மக்காத குப்பையாக பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE