அண்ணாமலையார் கோயில் என்பது தமிழகத்தின் சொத்து - திருவண்ணாமலை விழாவில் முதல்வர் ஸ்டாலின் கருத்து

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: மனிதர்களை பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது என திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.693 கோடியில் 1,71,169 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ரூ.70.27 கோடியில் முடிவுற்ற 91 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் ரூ.340.21 கோடியில் 246 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா திருவண்ணாமலையில் நேற்று காலை நடைபெற்றது.

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். ஆட்சியர் பா.முருகேஷ் வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிரி, அம்பேத்குமார், ஜோதி, சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த 1975-ல் அண்ணாமலையார் கோயிலுக்கு திருப்பணியை முழுமையாக செய்தது திமுக அரசு. 2004-ல், அண்ணாமலையார் கோயிலை தொல்பொருள் துறை கையகப்படுத்த முயற்சித்தது. அப்போது, நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற கருணாநிதியிடம், தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் சென்றுவிட்டால், ஆன்மிக பணி தொய்வடையும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, மத்தியில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அண்ணாமலையார் கோயிலை மீட்டுகொடுத்தது திமுக. மதத்தின் பெயரால், அரசியல் நடத்துபவர்களுக்கு, இந்த வரலாறு தெரியாது. அண்ணாமலையார் கோயில் என்பது தமிழகத்தின் சொத்து. அதனை பாதுகாத்த திமுக அரசுக்கும், திருவண்ணாமலைக்கும் நீண்ட உறவு உள்ளன.

இவையெல்லாம், மதத்தை வைத்து அரசியல் செய்யும் கண்களுக்கு தெரியாது. அவர்கள் உண்மையான ஆன்மிகவாதிகள் அல்ல. அவர்கள் உண்மையான ஆன்மிக வியாதிகள், ஆன்மிக போலிகள். ஆன்மிகத்தை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தக் கூடிய எண்ணத்தை கொண்டவர்கள். நாங்கள், மதத்தை வைத்து கட்சி நடத்தவில்லை. கட்சியானாலும், ஆட்சியானாலும் மக்கள் முன் நின்று ஆட்சி நடத்துகிறோம், கட்சி நடத்துகிறோம்.

இந்து சமய அறநிலையத் துறை மூலமாக சிறப்பான பணிகளை செய்து வருகிறோம். கோயிலுக்கு திருப்பணி செய்வது திராவிட மாடலா என சிலர் கேட்கின்றனர். அனைத்து துறையும் சமமாக வளர்ப்பதுதான் திராவிட மாடல். திராவிட இயக்கத்தின் தாய் கழகமான நீதி கட்சி ஆட்சியில், கோயிலை முறைப்படுத்த 1925-ல் இந்து சமய அறநிலையத் துறை சட்டம் உருவாக்கப்பட்டது. எது திராவிட மாடல் என்று பிற்போக்கு தனத்துடன், பொய்களுடன் பேசும் நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்மிகத்தின் பெயரால் அரசியல் நடத்த முயற்சிக்கின்றனர்.

ஆன்மிகத்துக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. ஆன்மிகத்தின் பெயரால் மனிதர்களை ஜாதி, மதங்களால் பிளவுபடுத்தும் நபர்களுக்கு நாங்கள் எதிரிகள். மனிதர்களை பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. மனிதர்களை பிளவுபடுத்துவதற்கு ஆன்மிகத்தை பயன்படுத்துபவர்கள், உண்மையான ஆன்மிகவாதியாக இருக்க முடியாது" என்றார். முன்னதாக அவர், பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் ஓராண்டு சாதனை மலரை வெளியிட, ஆட்சியர் பா. முருகேஷ் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்