'மனிதர்களை பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது' - முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: "மனிதர்களை பிளவுப்படுத்தக்கூடிய கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. மனிதர்களை பிளவுபடுத்த ஆன்மிகத்தை பயன்படுத்தக்கூடியவர்களும் உண்மையான ஆன்மிகவாதிகளாக நிச்சயமாக இருக்க முடியாது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் நடந்த அரசு விழாவில் பல்வேறு ரூ.340 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.70 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, 1.74 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.693 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது," பண்பாட்டு அடையாளங்கள் பரவிக் கிடக்கும் மாவட்டம் திருவண்ணாமலை. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான், கடந்த 1989-ம் ஆண்டு திருவண்ணாமலையை தனி மாவட்டமாக அறிவித்தார். திமுக ஆட்சி அமைந்தாலே, திருவண்ணாமலை மாவட்டம் புத்தெழுச்சிப் பெறும்.

இந்த மாவட்டத்தில் மட்டும் 13 திருக்கோயில்களின் குடமுழுக்கு விழா சிறப்பாக, விமரிசையாக நடைபெற்றுள்ளது. அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் வழிபாடு செய்யவும், கிரிவலம் செல்லவும், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, சித்திரை பவுர்ணமி மற்றும் தீப் திருவிழாவின்போது கிரிவலம் செல்வதற்காக, தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். கிரிவலம் வரும் பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் இந்த அரசு நிறைவேற்றி தரும்.

தமிழக அரசு செய்துவரும் இதுபோன்ற நலத்திட்டங்கள் எல்லாம், மதத்தை வைத்து அரசியல் செய்கின்ற கண்களுக்கு தெரியாது. ஏனென்றால் அவர்கள் உண்மையான ஆன்மிகவாதிகள் அல்ல. அவர்கள் உண்மையான ஆன்மிக வியாதிகள், ஆன்மிகப் போலிகள். ஆன்மிகத்தை தனது அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தக்கூடிய எண்ணத்தைக் கொண்டவர்கள். நாங்கள் மதத்தை வைத்து கட்சி நடத்தவில்லை. கட்சியானாலும், ஆட்சியானலும் மக்கள் முன்நின்று ஆட்சி நடத்துகிறோம், கட்சி நடத்துகிறோம். அதுதான் அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து தொழில் வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நடத்திவருகிறோம்.

அந்த அடிப்படையில்தான் இந்துசமய அறநிலையத்துறையின் மூலம் சிறப்பான பணிகளை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. கோயிலுக்கு திருப்பணி செய்வது திராவிட மாடலா என்று சிலர் கேட்கின்றனர். அனைத்து துறைகளையும் சமமாக வளர்ப்பதுதான் திராவிட மாடல் என்று நான் தொடர்ந்து கூறிவருகிறேன். திராவிட இயக்கத்தின் தாய்கட்சியான நீதிக் கட்சி ஆட்சியில்தான், இந்துசமய அறநிலையத்துறை சட்டம் உருவாக்கப்பட்டது. கோயில்களை முறைப்படுத்துவதற்காக. ஒரு சட்டம் வேண்டுமென்று ஆன்மிக எண்ணம் கொண்டவர்கள், கோரிக்கை வைத்தபோது அதனை ஏற்று சட்டம் இயற்றியதுதான் நீதிக்கட்சியினுடைய ஆட்சி.

எது திராவிட மாடலென்று பிற்போக்குத்தனங்களோடு, பொய்களுக்கும் முலாம் பூசி பெருமையோடு பேசக்கூடியவர்கள் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஆன்மிகத்தின் பெயரில் அவர்கள் அரசியல் நடத்த முயற்சிக்கிறார்கள். ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல. ஆன்மிகத்தின் பெயரில் மனிதர்களை சாதியால், மதத்தால், பிளவுபடுத்துகிறார்களே அவர்களுக்கு நாங்கள் எதிரிகள். மனிதர்களை பிளவுப்படுத்தக்கூடிய கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. மனிதர்களை பிளவுபடுத்த ஆன்மிகத்தை பயன்படுத்தக்கூடியவர்களும் உண்மையான ஆன்மிகவாதிகளாக நிச்சயமாக இருக்க முடியாது.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், ஒன்றே குலம் ஒருவனே தேவன், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், என்பதுதான் எங்கள் அறநெறி. அத்தகைய அறநெறியைக் கொண்ட ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம். அறம் என்றால் என்னவென்றே தெரியாத, அறிவுக்கு ஒவ்வாத மூடகருத்துகளை முதுகில் தூக்கிக்கொண்டிருக்கக்கூடிய சிலருக்கு போலியான பிம்பங்களை கட்டமைக்க வேண்டுமென்றால் உளறல்களும் பொய்களும்தான் தேவை" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்