சென்னை: தமிழகத்தில் 35.52 லட்சம் கரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதால் 18-59 வயதினருக்கு இலவசமாக பூஸ்டர் தவணை செலுத்த அனுமதிக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.
கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொதுசுகாதாரம், மருந்து துறை இயக்குநரகத்தில் இருந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் முதல்வர் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டில் 2,866 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் மருந்துகள், ரத்தம், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கொசு ஒழிப்பு பணியில் தினமும் 21,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மலேரியாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 140 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 மாவட்டங்களில் மலேரியா தொற்று இல்லை. தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களாக சென்னை, ராமநாதபுரம், தருமபுரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளன. இந்த நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன. யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வழங்குகிறது. இத்திட்டத்துக்கு ரூ.9.63 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுவரை 8,023 பேர் பயனடைந்துள்ளனர்.
இந்த ஆண்டில் ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் இதற்கு தடுப்பூசி போடப்படுகிறது. 9-12 மாத குழந்தைகளுக்கு முதல் தவணை, 16-24 மாத குழந்தைகளுக்கு 2-வது தவணை தடுப்பூசி போடும் பணி 90 சதவீதத்துக்கு மேல் முடிக்கப்பட்டுள்ளது.
மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, கொசுக்கள் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக அனைத்து தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜூலை 6-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 78.79 லட்சம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. வரும் செப்டம்பர் மாதத்துடன் 35.52 லட்சம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளன. இவை வீணாகாமல் தடுக்க, 18-59 வயதினருக்கு தனியார் மையம் தவிர்த்து அரசு மையத்திலேயே இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வ விநாயகம், சிறப்பு பணி அலுவலர் வடிவேலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago