நூறு சதவீதம் நல்ல தீர்ப்பு வரும்: ஜெயக்குமார் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: "எங்களது தரப்பில் சரியான திசையில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே நல்ல தீர்ப்பு கிடைக்குமென நூறு சதவீதம் நம்பிக்கை உள்ளது" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது. "நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து வெளியே விவாதிப்பது, ஆரோக்கியமான விஷயம் கிடையாது. வாதங்கள் நிறைவடைந்துள்ளன, எனவே நல்ல ஒரு தீர்ப்பு, நியாயமான ஒரு தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். திங்கட்கிழமையன்று ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எங்களது தரப்பில் சரியான திசையில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நூறு சதவீத நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. மேலும், வழக்கம்போல் பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ் அனைவருக்கும் சென்றுள்ளது. எனவே, உறுப்பினர்கள் அனைவரும் சென்னையில் நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நிலைதான் நிச்சயம் இருக்கும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE