அதிமுக பொதுக்குழு கூட்ட வழக்கு: ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பின் 3 மணி நேர வாதங்களின் விவரம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் தரப்பில் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரியும், இபிஎஸ் தரப்பில் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் மூன்று மணி நேரம் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமைக்கு (ஜூலை 11) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவில், "பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை தான் எனக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார். இதேபோல், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவரும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா?, பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?, எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்?, பொதுக்குழுவுக்கான அழைப்பிதழில் யார் கையெழுத்திடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. "அரசியல் கட்சியின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. முந்தைய பொதுக்குழுவில், எந்த நிகழ்ச்சி நிரலும் வெளியிடப்படவில்லை. தற்போது வெளியிட்டதாக கூறப்படும் நிகழ்ச்சி நிரல்கள் கட்சி அலுவலகத்தால் விநியோகிக்கப்பட்டவை. வரைவு நிகழ்ச்சி நிரலுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வழங்கவில்லை.

2432 பொதுக்குழு உறுப்பினர்கள், ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து, பொதுக்குழுவில் முடிவெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும், கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது, தலைமைக் கழக நிர்வாகிகள் இருக்கின்றனர் என கட்சி விதி கூறுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பொதுக்குழுவை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ், மொத்த கட்சியும் தனக்கு எதிராக உள்ளதாக கருதி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. கட்சியின் விதிகளில் திருத்தம் செய்ய ஒட்டுமொத்த தொண்டர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு உள்ளது.

செயற்குழு கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்த போதும், பொதுக்குழுவின் முன்வைத்து ஒப்புதல் பெற தீர்மானிக்கப்பட்டது. கட்சி விதிகளை திருத்த செயற்குழுவிற்கு அதிகாரம் இல்லை. செயற்குழு முடிவின்படி அடிப்படை உறுப்பினர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. கடந்த டிசம்பருக்கு முன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை திருத்த செயற்குழு முடிவு செய்தது.

செயற்குழுவுக்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்ய அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது. கடந்த ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. திருத்தங்கள் பொதுக்குழுவில் வைக்கப்படாததால், அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தலும் செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி விட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

2016 டிசம்பர் 29-ம் தேதி தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவை கட்சி நிர்வாகிகள் நியமித்தனர். அதன்பின்னர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். 2017 செப்டம்பர் 12-ல் நடந்த பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் கட்சி நிர்வாகிகளால் அனுப்பப்பட்டது. அதில் தலைமைக் கழக நிர்வாகிகள் கையெழுத்திட்டனர். அந்த அடிப்படையில் தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டதால் தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால் 20 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவைக் கூட்ட கோரினால், 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும். ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க அவசியமில்லை. ஜூன் 23-ல் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில்தான் ஜூலை 11-ம் தேதிக்கான கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே பொதுக்குழு குறித்து கடைசி நேரத்தில் நோட்டீஸ் அனுப்பியதாக கூற முடியாது. இந்தியாவிலேயே சில கட்சிகளில்தான் உட்கட்சி ஜனநாயகம் உள்ளது, ஜனநாயகம் நிலைக்க வேண்டும்" என்று இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யக்கோரி இபிஎஸ் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது ஓபிஎஸ் தரப்பில், "2021 டிசம்பர் செயற்குழு தீர்மானத்தின்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றனர். அது தொடர்பான தகவல் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக உட்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டும் காலியாக இருப்பதாக எப்படி கூற முடியும்.

கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை, ஏனென்றால், திருத்தம் அமலுக்கு வந்துவிட்டது. எனவே இரண்டு பதவிகளும் காலியாக உள்ளதாக முன்வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

பொதுக் குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் கொண்டுவரப்படாத நிலையில் பதவிகள் எப்படி காலியாகும். மேலும் கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் இறந்த போது என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. தலைவர்கள் உயிருடன் இல்லாதபோதுதான், பதவி காலியாக உள்ளது என கருத முடியும். அதிமுகவைப் பொறுத்தவரை, 1987 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் இத்தகைய நிலை ஏற்பட்டது.

மேலும், வழக்கமான பொதுக்குழுவாக இருந்தாலும், சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும், கட்சியின் விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரும்தான் கூட்ட முடியும்" என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் திங்கள்கிழமை (ஜூலை 11) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்