திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆராஞ்சி ஊராட்சியில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தின் இரண்டு லட்சமாவது மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 8) தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம், ஆராஞ்சி ஊராட்சியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் இரண்டு லட்சமாவது மையத்தை இன்று தொடங்கி வைத்தார். கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் பள்ளிகள் இயங்காமல் இருந்த நிலையில், பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டதோடு கற்றல் இடைவெளியும் ஏற்பட்டதை சரி செய்திட தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த உன்னத திட்டத்தை தமிழக முதல்வர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், முதலியார்குப்பம் கிராமத்தில் 27.10.2021 அன்று தொடங்கி வைத்தார்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 2 லட்சம் தன்னார்வலர்கள் 34 லட்சம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பித்து வருகின்றனர். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மாபெரும் ஆதரவு இத்திட்டத்தை வெற்றித் திட்டமாக மாற்றியுள்ளது. முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இத்திட்டம் ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
இத்திட்டத்தில், தன்னார்வலர்களின் கல்வித் தகுதி, ஆர்வம், குழந்தைகளைக் கையாளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தன்னார்வலர்களாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. மேலும், வாசிப்புப் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்கும் நோக்கத்தில் 1000 இல்லம் தேடிக் கல்வி மைய நூலகங்கள் தொடங்கப்பட்டன.
» துப்பாக்கிச் சூடு: சிகிச்சைப் பலனின்றி ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம்
» நடிகர் விக்ரம் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதி
ஒவ்வொரு நாளும் மாலை ஒன்றரை மணி நேரம் மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் நடைபெறுகின்றன. இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களின் கற்றல் நிலைகளை கண்டறிய அடிப்படை ஆய்வு நடத்தப்பட்டு, இதில் 18 லட்சம் மாணவர்களின் கற்றல் நிலைகள் ஆய்வு செய்யப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரின் கற்றல் நிலைக்கு ஏற்ற வகையில் குறைதீர் கற்றலை வடிவமைக்க இந்த அடிப்படை ஆய்வு உதவுகிறது.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில், குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க 'ரீடிங் மாரத்தான்' என்ற தொடர் வாசிப்பு இயக்கத்தை ஜூன் 1 முதல் ஜூன் 12-ம் தேதி வரை நடத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் கூகுள் ரீட் அலாங் செயலி வழியாக குழந்தைகளுக்கான கதைகள் படிக்கும் போட்டி நடத்தப்பட்டது. கோடை விடுமுறை காலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 18.36 லட்சம் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
நம் குழந்தைகள் இந்தப் போட்டியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் 263.17 கோடி சொற்களை வாசித்து உலக சாதனை புரிந்தார்கள். இந்தப் போட்டியில் 81.4 லட்சம் கதைகள் 9.82 லட்சம் மணி நேரத்திற்கு தொடர்ந்து வாசிக்கப்பட்டன. கூகுள் ரீட் அலாங் செயலி மூலம் வாசிப்பதில், உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் தமிழ் மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர் என்பது தமிழ் மொழிக்கும் தமிழகத்திற்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாகும்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் போன்ற திட்டத்தை செயல்படுத்தி கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடு செய்ய வேண்டும் என்று பிரபல பொருளாதார அறிஞர் ஜீன் டிரேஸ் ஜார்கண்ட் மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பது இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
இல்லம் தேடிக் கல்வி திட்டம், பெற்றோரிடத்திலும் மாணவர்களிடத்திலும் பெரும் வரவேற்பினை பெற்றதையடுத்து 2022-23 நிதியாண்டில் மேலும் 6 மாதங்களுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடக்கக் கல்வியில் அடிப்படை எண் அறிவையும் எழுத்தறிவையும் உறுதிப்படுத்தும் எண்ணும் எழுத்தும் என்ற மாபெரும் இயக்கத்திற்கு உறுதுணை புரியும் வகையில் இல்லம் தேடிக் கல்வி இரண்டு லட்சம் மையங்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டின் ஒவ்வொரு குழந்தையின் கல்வியையும் உறுதி செய்வதில் இல்லம் தேடிக் கல்வி பேருதவி புரிகிறது.
இவ்விழாவின்போது, தமிழக முதல்வர் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடர்பான காணொளியையும், புகைப்பட விளக்கப் புத்தகத்தையும் வெளியிட்டார். மேலும், தொடர் வாசிப்பு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களுக்கு கோப்பைகளையும் வழங்கினார்.
இவ்விழாவில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ், இல்லம் தேடிக் கல்வி சிறப்புப் பணி அலுவலர் க. இளம்பகவத், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago