அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், குறிப்பேடு, சீருடை வழங்குவதில் தாமதம் கூடாது: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், குறிப்பேடு, சீருடை வழங்குவதில் தாமதம் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது: ''தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களில் 60% மட்டுமே பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பேடுகள் (நோட்டுப் புத்தகம்), சீருடைகள் ஆகியவை யாருக்கும் இன்னும் வழங்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது.

திட்டமிடலில் ஏற்பட்டத் தவறு தான் இந்தக் குழப்பங்களுக்கு காரணம் என்று தெரிகிறது. பாடநூல்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்பட்டதால் தான் 40% மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. சீருடைகள் தயாரிப்பதற்கான ஆணை மிகவும் தாமதமாகவே வழங்கப்பட்டிருக்கிறது.

மாணவர்களுக்கு 3 கோடி குறிப்பேடுகள் அச்சிட ஆணை வழங்கப்பட்டு, அவற்றில் 75% அச்சிடப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டும் அவை இன்னும் வழங்கப்படவில்லை. பாடநூல்களும், குறிப்பேடுகளும் இல்லாததால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது.

கற்றலின் அடிப்படைத் தேவைகளை வழங்குவதில்கூட பள்ளிக் கல்வித்துறை அலட்சியம் காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அடுத்த ஒரு வாரத்திற்குள் அனைத்து மாணவர்களுக்கும் பாடநூல்களும், குறிப்பேடுகளும் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE