பாளையங்கோட்டையில் 10 நாட்களாக நீடிக்கும் குடிநீர் பிரச்சினையால் மக்கள் தவிப்பு

By செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த 10 நாட்களாக நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தவியாய் தவிக்கிறார்கள். இந்த பிரச்சினை குறித்து பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சியில் சமீப நாட்களாக குடிநீர் பிரச்சினை பல்வேறு இடங்களில் தலைதூக்கியுள்ளது. மாநகராட்சி கூட்டங்கள், வார்டு குழு கூட்டங்களில் பல்வேறு வார்டு கவுன்சிலர்களும் இவ்விவகாரத்தை எழுப்பி வருகிறார்கள். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மேயர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திலும் குடிநீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் மனுக்களை அளித்து வருகிறார்கள்.

மாநகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைப்பெடுத்து தண்ணீர் நாள் கணக்கில் வீணாவது குறித்தும் சமூக வலைதளங்களில் வீடியோக்களை மக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

பல ஆண்டுகளுக்குமுன் பதிக்கப்பட்ட குழாய்கள் உடைப்பெடுப்பதாகவும், பழைய இயந்திரங்கள் என்பதால் பழுது ஏற்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் பதில் சொல்லப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக உரிய பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால் பிரச்சினை தற்போது பெரிதாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்துக்கான ஆதாரமாக இருக்கும் மணப்படைவீடு புதிய தலைமை நீரேற்று நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக மோட்டார்களை இயக்க முடியவில்லை என்றும், இந்த நீரேற்று நிலையத்திலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குறைந்த அளவுக்கே தண்ணீர் நிரம்புவதாகவும், இதனால் கடந்த 29, 30-ம் தேதிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க இயலாது என்றும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி கடந்த மாதம் 28-ம் தேதி அறிவித்தார்.

அதன்படி 2 நாட்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படாது என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருந்தார்கள். ஆனால், கடந்த ஒருவாரத்துக்கு மேலாக பல்வேறு இடங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட இடங்களில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படவுமில்லை. இதனால் குடிநீருக்காக குடங்களுடன் மக்கள் வாகனங்களில் அங்குமிங்கும் அலைபாய்ந்தனர்.

இந்நிலையில் குடிநீர் கிடைக்கா மல் பாதிக்கப்பட்ட மக்கள் பாளைய ங்கோட்டையில் காவல்துறை கண்காணிப் பாளர் அலுவலகம் அருகேயுள்ள பிரதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்புள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவில் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகளும், போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

பாளையங்கோட்டையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் எல்லாம் குடிநீர் பிரச்சினை குறித்த பேச்சு எழுந்துள்ளது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், மாநகராட்சி நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாதபோதுகூட இந்த அளவுக்கு தண்ணீர் பிரச்சினை எழுந்ததில்லை என்றும் மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். கடந்த மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஒருவர் இதுகுறித்து வெளிப்படையாகவே புகார் கூறியிருந்தார்.

பாளையங்கோட்டை மண்டலத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை மீது மாநகராட்சி நிர்வாகம் அக்கறை செலுத்தி இப்பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE