சென்னை தனியார் மருத்துவமனைகளில் அறிகுறியுடன் சிகிச்சை: 1500 பேருக்கு சோதனை; 111 பேருக்கு கரோனா

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற 111 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் சளி போன்ற கோவிட் தொடர்பான அறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரங்களை தெரியப்படுத்த ஏற்கெனவே கடிதம் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் பொது சிகிச்சை செய்யும் மையங்களில் பூச்சியியல் வல்லுநர்கள் மூலம் விவரங்கள் பெறப்பட்டு வருகிறது. நேற்று வரை காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சை பெற்ற நபர்களில் தனியார் மருத்துவமனைகளிலிருந்து 610, சி.டி ஸ்கேன் மையங்களிலிருந்து 92, நகர்ப்புற ஆரம்ப மற்றும் சமுதாய நல மையங்களிலிருந்து 467 மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்களின் கள ஆய்வில் 345 என 1514 நபர்களின் விவரம் பெறப்பட்டுள்ளது.

இவர்களில் 1507 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 111 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டலத்திலும் பூச்சியியல் வல்லுநர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தொடர்ந்து ஆய்வு செய்து விவரங்களை பெற சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE