“ஒவ்வொரு நாள் தாமதமும் ஓபிசிகளுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி” - நீதிபதி ரோகிணி ஆணையம் குறித்து ராமதாஸ் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை:“நீதிபதி ரோகிணி ஆணையம் அதன் முடிவுகள் மீது மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டறிந்து, அறிக்கையை இறுதி செய்து இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யும்படி ஆணையிட வேண்டும். அதன் மீது மத்திய அரசு விரைந்து முடிவெடுத்து ஓபிசி தொகுப்பு முறை உள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டை பல்வேறு தொகுப்புகளாக பிரித்து வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் 13வது முறையாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. 2017ம் ஆண்டில் 3 மாத பதவிக் காலத்துடன் அமைக்கப்பட்ட ஆணையம், நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் அறிக்கையை தாக்கல் செய்யாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

நீதிபதி ரோகிணி ஆணையம் 2017-ம் ஆண்டு தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி அமைக்கப்பட்டது. அடுத்த 3 மாதங்களுக்குள் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் அடுத்தடுத்து 12 முறை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட போதிலும், இன்று வரை ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு எந்தவித நியாயமான காரணங்களும் இல்லை.

ஆணையத்தில் உள்ள சில உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ள தகவல்களின்படி ஆணையம் அதன் வரைவு அறிக்கையை கரோனா காலத்திற்கு முன்பாகவே தயார் செய்து விட்டது. அதன்மீதான மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது தான் மீதமுள்ள பணியாகும். இந்தப் பணியை அதிகபட்சமாக ஒரு மாதத்தில் நிறைவு செய்து விட முடியும். ஆனால், 2020-21ம் ஆண்டுகளில் ஆணையம் எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை. கடந்த 6 மாதங்களில் ஆணையம் ஒரு முறை கூட கூடவில்லை.

கடந்த 6 மாதங்களாக ரோகிணி ஆணையம் செயல்படாமல் இருப்பது குறித்து மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர் சுப்பிரமணியம் அவர்களிடம் சில வாரங்களுக்கு முன் செய்தியாளர்கள் கேட்ட போது, "நீதிபதி ரோகிணி ஆணையம் காலநீட்டிப்பு கோரவில்லை. அதன் பதவிக்காலம் ஜூலை 31-ஆம் தேதி முடிவடைவதற்கு முன்பாக அறிக்கையை தாக்கல் செய்து விடும்" என்று தெரிவித்திருந்தார்.

நீதிபதி ரோகிணி ஆணையம் அதன் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரவில்லை எனும் போது, அதற்கு 13வது முறையாக கால நீட்டிப்பு வழங்க வேண்டிய தேவை என்ன? நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பரிந்துரையை பெறுவதிலும், அதன் அடிப்படையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு தொகுப்பு முறையில் உள் இட ஒதுக்கீட்டை வழங்குவதிலும் தேவையற்ற தாமதம் செய்யப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. அதை மத்திய அரசு போக்க வேண்டும்.

ரோகிணி ஆணையம் இதுவரை மேற்கொண்டுள்ள பணி சிறப்பானது ஆகும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு ஒருசில தரப்பினரால் மட்டுமே அனுபவிக்கப்படுவதை புள்ளி விவரங்களுடன் உறுதி செய்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை 3 தொகுப்புகளாகப் பிரித்து இதுவரை இட ஒதுக்கீட்டை அனுபவிக்காத சாதிகளுக்கு 10%, ஓரளவு அனுபவித்த சாதிகளுக்கு 10%, அதிகமாக அனுபவித்த சமூகங்களுக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்பது தான் ரோகிணி ஆணையம் முன்வைத்துள்ள தீர்வு ஆகும். இது இறுதி செய்யப்பட வேண்டும். இதில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் ஓபிசிகளுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி ஆகும்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள 2633 சாதிகளில் 10 சாதிகள் மட்டுமே, அப்பிரிவுக்கான இட ஒதுக்கீட்டில் 24.95 விழுக்காட்டைக் கைப்பற்றுகின்றன; மேலும் 38 சமுதாயங்கள் 25.04 விழுக்காட்டையும், 102 சமுதாயங்கள் இன்னொரு 25.03 விழுக்காட்டையும், 506 சமுதாயங்கள் 22.32 விழுக்காட்டையும் கைப்பற்றுகின்றன. 27% ஓபிசி இட ஒதுக்கீட்டில் 97.34 விழுக்காட்டை 656 சாதிகள் கைப்பற்றிக் கொள்ளும் நிலையில் மீதமுள்ள 2.66 விழுக்காட்டை 994 சாதிகள் பகிர்ந்துகொள்கின்றன.

983 சாதிகளுக்கு ஓபிசி இட ஒதுக்கீட்டில் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. இந்த உண்மைகள் அனைத்தையும் நீதிபதி ரோகிணி ஆணையம் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளது. நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்று, 27% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு பல தொகுப்புகளாக பிரித்து வழங்கும் வரை மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள 1977 சாதிகளுக்கு சமூக அநீதி தொடரும். இதை மத்திய அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது. நீதிபதி ரோகிணி ஆணையம் அதன் முடிவுகள் மீது மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டறிந்து, அறிக்கையை இறுதி செய்து இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யும்படி ஆணையிட வேண்டும். அதன் மீது மத்திய அரசு விரைந்து முடிவெடுத்து ஓபிசி தொகுப்பு முறை உள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்