அமைச்சர் வாய்ப்பு கிடைக்காததால் ராஜன் செல்லப்பா ஆதரவாளர்கள் ஏமாற்றம்: மேயர் பதவியும் போனதால் சோகம்

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேருக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைத்தாலும் மிகவும் எதிர்பார்த்த வி.வி.ராஜன் செல்லப்பாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காதது அவரது ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2011 சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக 10 தொகுதிகளையும் கைப்பற்றியது. அமைச்சராக செல்லூர் ராஜுவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

5 ஆண்டுகளாகப் பல அமைச்சர்கள், இலாகாக்கள் மாற்றப்பட்டும் செல்லூர் ராஜு தொடர்ந்து கூட்டுறவுத் துறை அமைச்சராகவே செயல்பட்டார். இவருக்கு நிகராக முக்கிய பிரமுகராகக் கருதப்பட்ட வி.வி.ராஜன்செல்லப்பாவுக்கு மேயர் பதவி வழங்கப்பட்டது.

மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ எம்.முத்துராமலிங்கத்திடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, ராஜன் செல்லப்பாவிடம் வழங்கப்பட்டது. இதனால் கட்சி நடவடிக்கைகளில் ராஜன் செல்லப்பா தீவிரம் காட்டினார். எப்படியும் சட்டப் பேரவை தேர்தலில் சீட் பெற்று அமைச்சராகிவிட வேண்டும் என திட்டமிட்டு பணியாற்றினார்.

வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இல்லாததால் அதிர்ச்சி யடைந்த ராஜன் செல்லப்பா மற்றும் ஆதரவாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். பின்னர் தீவிர முயற்சி எடுத்து வேட்பாளர் வாய்ப்பை பெற்றார். மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எஸ்.பாண்டியனை மாற்றி, ராஜன் செல்லப்பாவுக்கு வழங்கப்பட்டது. இவரை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிட்டதால் ராஜன் செல்லப்பா எளிதாக வென்றார்.

இதனால் மதுரையில் அதிகாரம் மிக்கவர்களாக செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா இருந்தனர். இவர்களில் யாருக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைக்கும் என இக்கட்சி யினரிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கிடையே சாத்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் தொகுதியில் வாய்ப்பு பெற்று வென்றார். இதனால் ஏற்கெனவே 2 அமைச்சர்கள் போட்டியில் இருந்தாலும், தனக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைக்கும் என ராஜன் செல்லப்பா மிகவும் எதிர்பார்த்தார். மதுரை நகரில் ஒருவருக்கு மட்டுமே என கட்சித் தலைமை முடிவு செய்தால், செல்லூர் ராஜுவுக்குப் பதில் தனக்கே கிடைக்கும் எனவும் ஆவலுடன் காத்திருந்தார்.

ஆனால் செல்லூர் ராஜு, உதயகுமாருக்கு மீண்டும் அமைச் சர் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஒரே மாவட்டத்தில் 2 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால், ராஜன் செல்லப்பாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதனால் அவர் மட்டுமின்றி, ஆதரவாளர்களும் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது

இது குறித்து அவர்கள் கூறியது: மேயர் என்ற அதிகாரம் மிக்க பதவியில் இருந்தார் ராஜன் செல்லப்பா. அவருக்கு புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியும் தேடி வந்தது. இதனால் எம்எல்ஏ.வாகி அமைச்சராக திட்டமிட்டே, கடும் முயற்சியில் சீட் பெற்றார். கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்த எம்.எஸ்.பாண்டியனை 2 நாளில் மாற்றி, சீட் பெறும் அளவு கட்சித் தலைமையிடம் செல்வாக்கு பெற்றிருந்தார். இதனால் மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்எல்ஏ.வானார். செல்லூர் ராஜு தோற்க வேண்டும் என்பதற்காகத்தான் மீண்டும் மேற்கு தொகுதியிலேயே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் வென்றாலும் அமைச்சராக மாட்டார் எனத் தேர்தலுக்கு முன்பே தகவல் பரவியது. ஆனால் எல்லாமே மாறிவிட்டது. தற்போது அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்எல்ஏவாக மட்டுமே ராஜன் செல்லப்பா செயல்பட முடியும். அதிகாரம்மிக்க மேயர் பதவியை ஒப்பிடும்போது எம்எல்ஏ பதவி சாதாரணமானது. இது அவருக்கு மட்டுமல்ல, அவரை நம்பியுள்ள ஆதரவாளர்கள் அனைவருக்கும் ஏமாற்றமே. அவர் அமைச்சராகும்வரை மதுரை அதிமுகவில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்