“தமிழ்நாட்டை துண்டாடத் துணிந்துவிட்டது பாஜக” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு பாலகிருஷ்ணன் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டை பாண்டிய நாடு, பல்லவ நாடு என்று பிரிப்போம் என்று கூறிய பாஜகவின் நயினார் நாகேந்திரனை கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், “தமிழ்நாட்டை துண்டாடத் துணிந்துவிட்டது பாஜக” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

"தமிழகத்தை 117 சட்டமன்ற தொகுதிகள் வீதம் இரண்டாக பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரித்தால், இரண்டு இடங்களிலும் பாஜக வெல்லும்" என்று பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார். இந்தக் கருத்துக்கு பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டைப் பாண்டிய நாடு, பல்லவ நாடு என்று பிரிப்போம் என்றும், அதற்கான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம்!” என்றும் பாஜக சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா மாநில சுயாட்சியை வலியுறுத்தி பேசியதற்குப் பதிலளிப்பதாக சொல்லிக் கொண்டு, மொழிவழியில் அமைக்கப்பட்ட தமிழ் நாட்டை துண்டாடுவோம் என்றும், அதற்கான அதிகாரம் எங்களுக்கு உள்ளது என்றும் நயினார் நாகேந்திரன் நச்சுக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் பன்மைத்தன்மையை சிதைத்து மாநிலக் கட்டமைப்பை உடைத்து, அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அளவில் குவிக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டம். மொழிவழி மாநிலம் என்ற கோட்பாட்டையே ஆர்எஸ்எஸ் பரிவாரம் ஏற்பதில்லை.

மாநிலங்களைத் துண்டுத்துண்டாக சிதைக்க வேண்டும் என்ற சதித் திட்டத்திற்கு ஏதுவாக "தமிழகத்தை 117 சட்டமன்ற தொகுதிகள் வீதம் இரண்டாக பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரித்தால், இரண்டு இடங்களிலும் பாஜக வெல்லும்" என்று பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மொழிவழி மாநிலம் என்ற முழக்கம் எழுந்தது. விடுதலைக்குப் பிறகு, மொழி அடிப்படையில் தமிழ்நாட்டை உருவாக்கவும், அதற்கு தமிழ் நாடு எனப் பெயர் சூட்டவும் நடந்த போராட்டங்கள், தியாகங்கள் ஏராளம். மொழிவழி மாநிலங்களின் அடிப்படையில்தான் இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க முடியும்.

பாஜக-வின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு மதம், ஒரே பண்பாடு என்ற வெறித்தனமான கூச்சல் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு உலைவைக்கும் செயலாகும். அதற்காகத்தான் நயினார் நாகேந்திரன் விபரீதப் பேச்சு பேசுகிறார்.

தமிழ் மக்களின் மொழி மற்றும் பண்பாட்டு உணர்வுக்கு எதிராக உள்ள பாஜக, இப்போதுள்ள தமிழ் நாட்டில் தங்களால் ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாது என்ற விரக்தியில் தமிழ் நாட்டை துண்டாடத் துணிந்து விட்டது. இதைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

பாஜக ஆட்சியை பிடிக்கவும், பிடித்த இடங்களில் ஆட்சியைத் தக்க வைக்கவும், மத அடிப்படையில் மக்களை பிரிப்பது, மாநிலங்களை பிரிப்பது, கட்சிகளை உடைப்பது போன்ற ஜனநாயக விரோத உத்திகளை கையாண்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பாஜக-வின் திட்டத்திற்கு எதிராக தமிழக மக்கள் கண்டன குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்