குழந்தைகள் உதவி மையத்துடன் கைகோர்த்து மீட்கும் ரயில்வே - இரண்டரை ஆண்டுகளில் 2,553 சிறார்கள் மீட்பு

By மு.வேல்சங்கர்

சென்னை: வறுமைச் சூழல், பெற்றோரிடம் சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வீட்டை விட்டு வெளியேறி, ரயில் நிலையங்களில் தவிக்கும் இளம் சிறார்களை மீட்கும் முயற்சியில் குழந்தைகள் உதவி மையத்துடன் ரயில்வே நிர்வாகம் இணைந்து தீவிரமாக செயல்படுகிறது. தெற்கு ரயில்வேயில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 2,553 சிறுவர், சிறுமியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

ரயில் நிலையங்கள், ரயில்களில் பெண்கள், குழந்தைகள், சிறுமியர்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதிலும் குழந்தைகள், சிறார்களைப் பாதுகாக்கும் நோக்கில் ரயில்வேயும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு அமைச்சகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக, இணைந்து செயல்படுகிறது.

அதன்படி, ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மைய அலுவலர்கள், ஆர்.பி.எஃப். போலீஸார் மற்றும் தமிழக ரயில்வே போலீஸார் இணைந்து சிறார்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

தீவிர கண்காணிப்பு

குறிப்பாக, ஆர்.பி.எஃப் போலீஸார், தமிழக ரயில்வே போலீஸார் சிசிடிவி மூலம் கண்காணிக்கும் போதோ, ரோந்து பணியில் ஈடுபடும் போதோ, சிறுவர், சிறுமியர் ரயில் நிலையங்களில் சுற்றித் திரிவதைப் பார்த்தால், உடனடியாக, அங்கு சென்று அவர்களை மீட்டு, குழந்தைகள் உதவி குழுவுக்கு தகவல் கொடுக்கின்றனர்.

அவர்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட சிறுவர், சிறுமியர்கள், உரியவரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 2,500-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

தெற்கு சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் 2020 முதல் 2022 மே வரை மொத்தம் 2,553 சிறுவர், சிறுமியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

2020-ம் ஆண்டில் 547 சிறுவர்கள், 84 சிறுமிகள் என்று 631 பேரும், 2021-ல் 875 சிறுவர்கள், 159 சிறுமிகள் என்று 1,034 பேரும், 2022-ம் ஆண்டு மே வரை 750 சிறுவர்கள், 138 சிறுமிகள் என்று 888 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் ஆவர்.

சென்னை கோட்டத்தில் அதிகம்

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் அதிக அளவில் சிறுவர், சிறுமியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், திருவள்ளூர், காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் சிறுவர் - சிறுமியர்கள் மீட்கப்படுவது அடிக்கடி நிகழ்கிறது. இதனால், சென்னை ரயில்வே கோட்டத்தில் 2020-ல் 343 பேரும்,2021-ல் 523 பேரும், 2022-ல் 287 பேரும் என்று 1,153 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

வீட்டில் நிலவும் வறுமைச் சூழலால் வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம், பெற்றோர் கண்டிப்பது, ஊர் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை, பருவக்காதல் இப்படி பல காரணங்களால், சிறுவர், சிறுமியர்கள் வீட்டில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

பெரும்பாலான சிறுவர், சிறுமியர்கள் வீட்டுக்கு திரும்பிச் செல்ல போதிய பணம் இல்லாத நிலையிலும், வழி தெரியாத சூழ்நிலையிலும் மீட்கப்படுகின்றனர். அவ்வாறு மீட்கப்படும் சிறார்கள், குழந்தைகள் உதவிகுழு மூலமாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். பெற்றோர், பாதுகாவலர் இல்லாத சிறார்கள், குழந்தைகள் நலமையத்துக்கு அனுப்பப்பட்டு பராமரிக்கப்படுவார்கள். இந்தப் பணியை குழந்தைகள் நலக் குழு கவனித்துக் கொள்ளும்.

ரயில் நிலையங்களில் குழந்தைகள் சுற்றுவது தெரிந்தால், ஆர்.பி.எஃப் உதவி எண் 139-ல் தொடர்பு கொண்டு தெரிவித்து, பாதுகாக்க முடியும். காணாமல் போன சிறார்கள் தொடர்பாகவும் தெரிவித்து பதிவு செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

குழந்தைகள் உதவி எண் ‘1098’

தென் இந்திய குழந்தைகள் உதவி மைய (Child Helpline) ஒருங்கிணைப்பாளர் தினேஷ் கூறும்போது, ‘‘ரயி்ல் நிலையங்களில் தவிக்கும் சிறார்கள், தவறான நபர்களிடம் சிக்காமல் தடுத்து வருகிறோம். குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்பை உறுதி செய்வது எங்களின் முக்கிய நோக்கம். தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட14 ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையம் உள்ளது. ரயில் நிலையத்தில் சிறார்கள் சுற்றித்திரிவது தெரியவந்தால், ‘1098’ என்ற குழந்தைகள் உதவி எண்ணுக்கு தகவல் கொடுக்கலாம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE