சென்னை: “கரோனா தொற்று பாதித்தோரில் 40 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து முதலியார்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 12-14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், "தமிழகத்தில் நேற்றைக்கு 2622 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் 14,504 பேர் ஆக்டிவ் கேஸ் என்கின்ற வகையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் 5 சதவீதம் பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளில் பெரும்பாலோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். தொற்றின் வேகம் என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் அறிவுறுத்தலுக்கேற்ப தொற்று அதிகம் பரவியிருக்கிற சென்னை, செங்கல்பட்டு , கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து விரைவுபடுத்த வேண்டும் என்கின்ற வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசு சார்பில் கடந்த பல ஆண்டுகளாக நிரப்படாமல் இருந்து மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கள பணியாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் தொடங்கியிருக்கிறது. 4308 பேர் புதிதாக நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவப் பணியாளர் தேர்வானையத்திடம் அந்த பணிகள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
சற்று ஏறக்குறைய 200 வகை காலிப்பணியிடங்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் இதர வகையிலான காலிப்பணியிடங்களுக்கு தனித்தனியே விளம்பரப்படுத்தி நேர்காணல் நடத்தி அந்த பணியிடங்களை செப்டம்பர் இறுதிக்குள் செய்து தருவதாக சொல்லியிருக்கிறார்கள். இந்த பணி நியமனங்கள் முடிவுற்ற பிறகு முழுமையான அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்களாக இருந்தாலும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக இருந்தாலும் அதற்காக நியமிக்கப்பட வேண்டிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
வருகிற 10ம் தேதி தமிழ்நாடு முழுவதிலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்கள் 34,46,000 பேர் உள்ளனர். இரண்டாவது தவனை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்கள் 1,08,21,539 பேர் உள்ளனர். ஆக 1,45,00,000 பேரும் இலக்கு வைத்து லைன் லிஸ்ட் தயாரித்து வீடுகள் தோறும் சென்று 10ம் தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
12 வயது முதல் 14 வயதிற்கான தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் 15 வயது முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி பள்ளிகளில் போடும் பணி நடைபெற்று வருகிறது. முதலியார்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 14 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகத்தை பொறுத்த வரை 12 வயது முதல் 14 வயது வரை தடுப்பூசி இலக்கு என்பது 21,21,000 பேர். இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 86.09 சதவீதம் பேர். முதல் தவணை முடிந்து 29 நாட்கள் கழித்து இரண்டாவது தவணை செலுத்தப்படவேண்டியர்கள் 58.03 சதவீதம் பேர். அதில் யாருக்கெல்லாம் போட வேண்டும் என்று ஆசிரியர்களிடம் கேட்டறிந்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 95 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 85.37 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். செங்கல்பட்டை பொறுத்தவரை முதல் தவனை 90.5 சதவீதமாகவும், 74.73 சதவீதமாகவும் உள்ளது. மாநில அளவிலான சதவீதத்தை எட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாதிப்புக்குள்ளான 14,504 பேர்களில் வீடுகளில் 95 சதவீதம் பேர் இருக்கிறார்கள். மத்திய அரசின் விதிமுறைகள் என்பது பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது 5 சதவீதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான அவசியம் தற்போது எழவில்லை.
முகக்கவசம் அணிந்து கொள்வது என்பது நம்மை நாம் தற்காத்துக் கொள்வது, முகக்கவசம் மற்றும் தடுப்பூசி போடுவது சிறந்த தடுப்பு நடவடிக்கையாக உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளது.
அண்மையில் முதல்வர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து துறை செயலாளர்களும் அவரவர் சார்ந்திருக்கின்ற ஒரு துறையில் அதிக எண்ணிக்கையில் ஒன்றாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பள்ளி விழா, சமூக விழா, அரசியல் நிகழ்வுகளில் 10க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago