நாமக்கல்: நாமக்கல் சிலுவம்பட்டி ஊராட்சி அருந்ததியர் காலனி குடியிருப்பில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில் மறுநாளே, ரூ.20 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் குடிநீர் இணைப்பு மற்றும் வடிகால் வசதியுடன் கூடிய கான்கிரீட் சாலைக்கான ஆணையையும், ஹோமியோபதி மருத்துவருக்கு பணி ஆணையையும் முதல்வர் வழங்கினார்.
நாமக்கல்லில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை நாமக்கல் - திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள சிலுவம்பட்டி ஊராட்சி அருந்ததியர் குடியிருப்புப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அங்குள்ள ஹோமியோபதி மருத்துவர் ஜெயப்பிரகாஷ் என்பவரது வீட்டிற்கு சென்று தேநீர் அருந்தி அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கல்வி குறித்த விவரங்களையும், குடியிருப்பில் குடிநீர் வசதி, மின்சார வசதி போன்றவை குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மதிய உணவு இடைவேளையின்போது ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுற்றுலா மாளிகைக்கு வந்தார்.
அப்போது சிலுவம்பட்டி ஊராட்சி அருந்ததியர் குடியிருப்பு மக்கள் விடுத்த கோரிக்கையையேற்று ரூ.20 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் குடிநீர் இணைப்பு மற்றும் வடிகால் வசதியுடன் கூடிய கான்கிரீட் சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதி ஆணையை சிலுவம்பட்டி ஊராட்சித் தலைவர் பழனிவேலு மற்றும் அப்பகுதி மக்களிடம் வழங்கினார்.
இதுபோல் ஹோமியோபதி மருத்துவர் ஜெயப்பிரகாஷ், தனியார் கல்லூரியில் பணிபுரிவதற்கான பணி ஆணையையும் அவரை நேரில் அழைத்து வழங்கினார். முதல்வரின் உடனடி நடவடிக்கையால் சிலுவம்பட்டி அருந்ததியர் குடியிருப்பு பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உடனிருந்தார்.