நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்புடன் ஆனிப் பெருந்திருவிழா நடைபெறுகிறது. நேற்று காலை கோயில் உள் பிரகாரத்தில் பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி - அம்பாள் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் வேத மந்திரங்கள் முழங்க திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கொடிமரத்துக்கு பூஜைகள் நடைபெற்றன. இதில்,ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவில் பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி - அம்பாள் வீதிஉலா நடைபெற்றது.

திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி - அம்பாள் வீதிஉலா நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனித் தேரோட்டம் வரும் 11-ம் தேதி நடக்க உள்ளது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல்தேரில் சுவாமி - அம்பாள் எழுந்தருள்கின்றனர். காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது.

அன்னதான திட்டம் விரிவாக்கம்

நெல்லையப்பர் கோயிலில் கடந்த 2002-ம் ஆண்டு அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு, தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதை விரிவுபடுத்தி, முக்கிய திருவிழா நாட்களில் தினமும் 500 பேருக்கு அன்னதானம்வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில்500 பேருக்கு விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டத்தை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று தொடங்கிவைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய, அறநிலையத்துறை இணை ஆணையர்கவிதா பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE