மதுரை-குமரி நான்குவழி சாலைகளில் அதிவேகமாக சென்றால் அபராதம்: வேகத்தை கணக்கிடும் கருவிகள் அமைப்பு

By இ.மணிகண்டன்

மதுரை-கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் விபத்துக்களைத் தடுக்கவும், கண்காணிக்கவும் தொடர்ச்சியாக மின் விளக்குகள் மற்றும் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளதோடு, வாகனங்களின் வேகத்தை அளவிடும் கருவிகளும் பொருத்தப்பட்டு வருகின்றன.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை-கன்னியா குமரி நான்கு வழிச் சாலையில் விபத்துகளைத் தடுக்கவும், கண்காணிக்கவும் சாலையில் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

நவீன தொழில்நுட்ப மேம் பாட்டுத் தொழில்நுட்பம் (ஏ.டி.எம்.எஸ்) மூலம் மதுரை மாவட்டம் சமயநல்லூரில் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள 243 கி.மீ. தூர நான்கு வழிச் சாலையில் ஒரு கி.மீ. தூரத்துக்கு ஒரு கண்காணிப்பு கேமராவும், 5 கி.மீ. தூரத்துக்கு ஒரு இடத்தில் நவீன டூம் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் சாலை சந்திப்புகளில் ஸ்பீடு டூம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாகனங்களின் வேகத்தை அளவிடும் கருவிகளும் குறிப்பிட்ட இடைவெளியில் பொருத்தப்பட்டு வருகின்றன.

இந்த நான்கு வழிச்சாலையில் வாடகை வாகனங்கள் அதிக பட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்திலும், சொந்த வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும். மேலும் ஆங்காங்கே சாலையில் குறிப்பிடப்பட்டுள்ள வேகத்துக்குள் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும்.

வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தை விட அதிவேகமாகச் சென்றால் அந்த வாகனத்தின் பதி வெண் மற்றும் வாகனத்தின் வேக அளவு நவீன இயந்திரம் மூலம் பதிவு செய்யப்படும்.

அடுத்ததாக வரும் சுங்கச் சாவடியில் அதி வேகமாகச் சென்றதற்கான அபராதம் வசூலிக்கப்படும். அபராதம் செலுத்திய பின்னரே, சுங்கச் சாவடியைக் வாகனம் கடந்து செல்ல அனுமதிக்கப்படும். இந்த நடைமுறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE