கூட்டுறவுத் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.780 கோடி மதிப்பில் முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் 

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: கூட்டுறவுத் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் தோராயமாக ரூ.780 கோடி மதிப்பிலான முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கி மாணவர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே கூட்டுறவுத்துறை சார்பில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்குவதும் தொடங்கியுள்ளது.

மாணவர் சேர்க்கையை தொடங்க விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமையில் இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியது: ''திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டுக்காக புதிய கல்லூரிகள் தொடங்க தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து நான்கு கல்லூரிகள், பழநியில் ஒரு சித்தா கல்லூரி, கொடைக்கானலில் ஒரு கூட்டுறவு பயிற்சி மையம் என 6 கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதி பெறப்பட்டு, கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது, கல்லூரியில் முதலாம் ஆண்டில் பி.ஏ.(கூட்டுறவு, வரலாறு, பொருளியல். வணிகவியல்). பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் ஆண்டுக்கு ரூ.1,465 கட்டணத்தில் உயர்கல்வி வழங்கப்படுகிறது, என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆத்தூர் பகுதியை சுற்றியுள்ள 600-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நத்தம் பகுதியில் புதிய கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டக்கல்லூரி கொண்டுவர தமிழக முதல்வரிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்படும். கூட்டுறவுத் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் தோராயமாக ரூ.780 கோடி மதிப்பிலான முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடத்த சட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் காந்திநாதன், கூட்டுறவு கல்லூரி முதலவர் வெங்கடாசலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE