சென்னை: சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்காக போராடி வரும் பெண் போராளி தீஸ்தா சீதல்வாட்டை விடுதலை செய்யவேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மனித உரிமைப் போராளியும் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (Citizens for Justice and Peace- CJP) எனும் தன்னார்வ அமைப்பின் நிறுவனருமான வழக்கறிஞர் தீஸ்தா சீதல்வாட், குஜராத் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
2002 குஜராத் படுகொலைகளின் போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு வளாகத்தில் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த முன்னாள் காங்கிரசு எம்.பி. இஷான் ஜாப்ரியோடு பலரையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற இந்துத்துவ மதவெறி பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நடத்தியவர்தான் தீஸ்தா சீதல்வாட்.
குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத வெறியாட்டத்தை நடத்திய இந்துத்துவ வெறியர்கள் 117 பேர் குற்றவாளிகள் என்று நீதித்துறையால் தண்டிக்கப்பட்டுள்ளதிலும், நரோடா பாட்டியா எனுமிடத்தில் நடந்த முஸ்லிம் படுகொலை வழக்கில் குஜராத்தின் அன்றைய மோடி ஆட்சியில் அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 26 ஆண்டுகால சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதிலும் தீஸ்தாவின் பங்கும் அவரது கடும் உழைப்பும் முக்கியமானவை.
குஜராத் படுகொலைகள் குறித்து விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு அப்போதைய முதல்வர் மோடி உள்ளிட்ட 64 பேரை விடுவித்தது. இதனை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஜாப்ரி மனைவி, ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் இருவரும் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம் 2002 குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 64 பேரை சிறப்பு விசாரணைக் குழு விடுவித்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்து, அவர்களைப் புனிதர்கள் ஆக்கிவிட்டது.
இந்நிலையில்தான் குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக வழக்கறிஞர் தீஸ்தா செதல்வாத், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஞ்சீவ் பட், ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது, தீஸ்தா சீதல்வாட், ஜாகியா ஜாப்ரி மூலம் நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்ததோடு, சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்.ஐ.டி) தவறான தகவல்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய தண்டனை சட்டம் 468 (ஏமாற்றும் நோக்கத்திற்காக போலியான தகவல்களை அளித்தல்), 471 (போலி ஆவணங்கள் பயன்படுத்துதல்), 194 (மரண தண்டனை பெறும் நோக்கத்துக்கு தவறான சாட்சியங்களை வழங்குதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையிலிருந்த தீஸ்தா சீதல்வாட் குஜராத் காவல்துறையால் கைது செய்யப்பட்டு குஜராத் மாநில சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பீமாகோரேகான் வழக்கில் மனித உரிமைப் போராளிகளான கவிஞர் வரவரராவ், வழக்கறிஞர் சுதாபரத்வாஜ், கவுதம் நவ்லாகா, வெர்னான் கான்சால்வஸ், அருண் பஃரைரா, சொமா சென், பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே, ரோனா வில்சன், பேராசிரியர் ஹனிபாபு உள்ளிட்ட 16 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை மூலம் பொய் வழக்கு புனையப்பட்டு, மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி 84 வயதில் சிறைக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிர் இழந்தார். இந்துத்துவ சனாதனக் கூட்டத்தின் வெறுப்பு அரசியலை கருத்தியல் ரீதியாக எதிர்க்கும் சிந்தனையாளர்கள், மனித உரிமைக்காக குரல் கொடுப்போர், தலித், பழங்குடி மக்களுக்காக பாடுபடுவோரை பொய் வழக்கில் கைது செய்து, தேசத்துரோகச் சட்டத்தை ஏவுவதும், ஊபா சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வதும் பாசிச பாஜக ஆட்சியில் தொடர்வது கடும் கண்டனத்துக்குரியது.
சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்காக போராடி வரும் பெண் போராளி தீஸ்தா சீதல்வாட் மீதான பொய் வழக்கை ரத்து செய்து உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்.'' இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago