தமிழக அரசு தரப்பு முன்வைக்காத வாதங்கள் நீக்கம்: நளினி வழக்கின் தீர்ப்பில் திருத்தங்கள்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பிலிருந்து, "ராஜீவ் கொலை வழக்கு ஆயுள் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான தீர்மானத்தை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சரி" என அரசு வாதிட்டதாக பதிவு செய்யப்பட்ட கருத்துகளை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய அதிமுக, ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி, அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்தார். இதையடுத்து, ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த 17-ம் தேதி தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்காத கருத்துகள் மற்றும் வாதங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அந்தப் பகுதியை நீக்க வேண்டும் என்று உள்துறை இணை செயலாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சரி என்று தலைமை வழக்கறிஞர் தன் வாதத்தில் கூறியதாக தீர்ப்பில் உள்ளது. ஆனால் அவர் அப்படி எதுவும் கூறவில்லை.

மேலும், அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து, ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ கையெழுத்திட வில்லை என்றால், நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று தலைமை வழக்கறிஞர் கூறியதாக தீர்ப்பில் உள்ளது. இந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. எனவே, நளினி வழக்கு மீதான தீர்ப்பை திருத்த வேண்டும். தலைமை வழக்கறிஞர் கூறாத வாதங்களை தீர்ப்பில் இருந்து நீக்க வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட கருத்துகளை நீக்கி உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE