'திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுமைக்குமான வெற்றிச் சூத்திரமாக அமைந்துள்ளது' - முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுமைக்குமான வெற்றிச் சூத்திரமாக அமைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் பல முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "நீண்ட நெடிய வரலாற்றினைக் கொண்டுள்ள நகரம், இந்த திருப்பத்தூர் நகரம். சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது எனவும், சோழ, விஜயநகர, ஹொய்சாள மன்னர்கள் ஆண்ட பகுதி எனவும் இந்த வரலாறு கூறுகின்றது.

விஜயநகரப் பேரரசின் ஆட்சியின்போது, பதினான்காம் நூற்றாண்டில் திரு-வன-புரம் என்ற பெயரில் இருந்த ஊர்தான், திருப்பத்தூர் எனப் பெயர் மாற்றம் அடைந்து இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. பத்து புனிதமான ஊர்கள் இருந்ததால் திரு-பத்து-ஊர் என அழைக்கப்பட்டு, பின்னர், அது திருப்பத்தூர் ஆனது எனவும் கூறப்படுகிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புகழ்மிக்க மாவட்டத்து மக்களான உங்களை சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன், பூரிப்பு அடைகிறேன்.

ஜவ்வாது மற்றும் ஏலகிரி மலைத் தொடர்களால் சூழப்பட்ட, இயற்கை எழில் மிகுந்த மாவட்டம் இந்த மாவட்டம். பழங்குடி மக்கள் அதிகமாக வசிக்கும் மலைத்தொடர் இது. ஏலகிரி மலையில் உற்பத்தியாகும் காட்டாறு, மலை அடிவாரத்தில் கீழே இறங்கி, ஜலகம்பாறை அருவியாக உருவெடுக்கிறது. பொதுமக்கள் பல இடங்களிலிருந்து வந்து கண்டுகளிக்கக்கூடிய வகையிலும் இந்த இடம் அமைந்துள்ளது.

அப்படிப்பட்ட இயற்கை சூழ்ந்த மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு, உங்களையெல்லலாம் சந்திக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கக்கூடிய ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்திற்கான, என்னதான் நீர்வளத் துறை அமைச்சராக இருந்தாலும், கழகத்தினுடைய பொதுச் செயலாளராக இருந்தாலும், இந்த ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்திற்கான அமைச்சர் யார் என்று கேட்டால் துரைமுருகன் தான் என்று எந்த நேரத்திலும் சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலை. எனவே, அப்படிப்பட்ட அவருக்கும், இந்த மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய, எந்நாளும் பொறுப்பான அமைச்சராக இருக்கக்கூடிய எ.வ.வேலுவுக்கும் , மாவட்டக் கழக நிர்வாகத்திற்கும் எனது நன்றியைத் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த 25ம் நாளன்று இந்த விழா நடந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த வாரம், லேசான காய்ச்சல் எனக்கு ஏற்பட்டு, அது முழுமையாக குணமாகாத காரணத்தால், மருத்துவர்கள் “ஒருசில நாட்கள் ஓய்வெடுப்பது நல்லது” என்று எனக்கு உத்தரவிட்டதால், அந்த குறிப்பிட்ட தேதியில் என்னால் வர முடியவில்லை.

ஆனால், இன்றைய நாள் புதிய உற்சாகத்தோடு உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். மருந்து, மாத்திரைகளைவிட மக்கள் முகங்களைப் பார்க்கும்போதுதான், எனக்கு உற்சாகமும் மலர்ச்சியும் ஏற்படுகிறது. உங்களது முகங்களைப் பார்த்ததும், உடல்சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கிறது. மக்களைச் சந்திக்கின்றபோது ஏற்படக்கூடிய உற்சாகத்திற்கு ஈடு, இணை எதுவும் கிடையாது.

எழுச்சியை மட்டுமல்ல, உணர்ச்சியை மட்டுமல்ல, வாழ்க என்ற அந்த முழக்கத்தை மட்டுமல்ல, சில தாய்மார்கள், சில இளைஞர்கள் என்னை நிறுத்தி, என் கையைப் பிடித்துக்கொண்டு கேட்டார்கள், “உடம்பு எப்படி இருக்கிறது, முதலில் அதைச் சொல்” என்று சொன்னார்கள். அதுதான் என்னுடைய மெய் சிலிர்த்துக் கொண்டிருக்கிறது. நான் சொன்னேன், நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? இந்த ஆட்சி எப்படி நடக்கிறது? ஏதாவது குறை இருக்கிறதா? குற்றம் இருக்கிறதா? என்று சொல்லுங்கள் என்று கேட்டபோது, எந்தக் குற்றமும் கிடையாது, குறையும் கிடையாது, முதலில் நீங்கள் ஓய்வு எடுங்கள் என்று தான் சொன்னார்கள். அவர்களுடைய சிரிப்பைப் பார்த்தேன்.

'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்றார் பேரறிஞர் அண்ணா. ஏழையின் சிரிப்பைக் காணும்போது, நாமும் உற்சாகம் அடைகிறோம் என்பதுதான் முழு உண்மை!

கடந்த ஆட்சியாளர்கள், ஒரு திட்டத்துக்கு ஒரு விழா நடத்துவார்கள். ஆனால் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான், பல்வேறு திட்டங்களுக்கும் சேர்த்து ஒரே விழாவாக நாம் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். ஒரு திட்டத்திற்கு ஒரு விழா எடுப்பதாக இருந்தால், ஒவ்வொரு மாவட்டத்திலும் 365 நாளும், தனித்தனியாக நாம் விழா எடுத்தாக வேண்டும். அந்தளவுக்கு ஏராளமான திட்டங்கள், அந்தத் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அவசிய, அவசரமான திட்டங்கள் எவை எவை என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்து, அதனை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு நாம் தொடர்ந்து செய்துவருகிறோம்.அனைவருக்குமான வளர்ச்சி – அனைத்துத் துறை வளர்ச்சி – அனைத்து மாவட்ட வளர்ச்சி – அனைத்து மக்களின் வளர்ச்சி இது தான் 'திராவிட மாடல்' ஆட்சி, அதைத்தான் இன்றைக்கு நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சி என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான வெற்றிச் சூத்திரமாக அமைந்துள்ளது. எப்போதுமே இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடுதான் இருந்திருக்கிறது.

இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, விடுதலை முழக்கத்தை முதன்முதலாக ஒலித்த மண் இந்தத் தமிழ்நாட்டு மண். அதுவும் உங்கள் மாவட்டத்திற்கு அருகில் இருக்கும் வேலூரில் தான் முதன் முதலில் புரட்சியே தொடங்கியது.இன்றைக்கு இந்தியா முழுக்க சமூகநீதியின் குரல் ஒலிக்கிறது. பல்வேறு மாநிலங்களில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த சமூகநீதித் தத்துவத்தை முதன்முதலாக 1920ம் ஆண்டே அமல்படுத்தியது தமிழ்நாடுதான்.

இன்றைக்கு இந்தியா முழுக்க மாநில சுயாட்சிக் குரல் ஒலிக்கிறது. பா.ஜ.கட்சி நீங்கலாக அனைத்து மாநில முதலமைச்சர்களும் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுப்பவர்களாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மாநில சுயாட்சிக்காக, 1974ம் ஆண்டே தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் தான் கருணாநிதி

இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, 27 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடினோமே, ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங், இந்தியாவின் பிரதமராக இருந்தபோது, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வைத்து, அவர் மூலமாக இந்தியா முழுமைக்குமான பிற்படுத்தப்பட்ட மக்களுடைய வாழ்வில் ஒளியேற்றினோம் என்று சொன்னால், இப்போதும் 27 விழுக்காட்டு இடஒதுக்கீட்டு உரிமையை, நமது சட்டப் போராட்டங்களின் மூலமாக உறுதி செய்து தந்திருக்கிறோம். இப்படி என்னால் அடுக்கிக் கொண்டே போக முடியும்.

அந்த வகையில் அரசியல் நெறிமுறைகளை மட்டுமல்ல, ஆட்சியியல் நெறிமுறைகளையும் இந்தியாவுக்கு வழங்கும் வழிகாட்டியாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கிறது. இப்போதும் நாம் அறிமுகம் செய்து வரும் எத்தனையோ நல்ல பல திட்டங்களை பல்வேறு மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. பெரும்பாலான மாநில அரசுகள்

சமூகநீதி அரசுகளாக – மாநில சுயாட்சி பேசக்கூடிய அரசுகளாக – ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு சமூகநலத் திட்டங்களை அமல்படுத்தும் அரசுகளாக – பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய, விளிம்புநிலை மக்களைப் பற்றிக் கவலைப்படும் அரசுகளாகச் செயல்பட, வழிகாட்டும் அரசாக திராவிட கம்பீரத்தோடு சொல்லவேண்டும் என்று சொன்னால், அது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு தான் என்பதை நான் அழுத்தந்திருத்தமாக குறிப்பிட விரும்புகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழக அரசு பேரறிஞர் அண்ணா தலைமையில் முதன்முதலில் 1967ம் ஆண்டு அமைந்தது. பேரறிஞர் அண்ணா மூன்று முத்தான திட்டங்களை நமக்குக் கொடுத்தார். ஆனால் காலம் அவரை நம்மிடம் இருந்து பிரித்தது. இரண்டே ஆண்டுகளுக்குள் நம்மிடமிருந்து அவரை பிரித்தது.

அதன் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற, நம்முடைய கருணாநிதியால் உருவாக்கிய திட்டங்களால் உருவானதுதான் இந்த நவீன தமிழ்நாடு! இன்றைக்கு நாம் பார்க்கிறோமே இந்த தமிழ்நாடு, நவீன தமிழ்நாடாக பார்க்கிறோமே, இது கருணாந்தியால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு!

அப்போது, வெளிமாநிலத்தில் இருந்து வந்த பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் இதனை ஆய்வு செய்து விட்டு சொன்னார்கள், 'திராவிட முன்னேற்றக் கழகம் தனது எல்லையை தமிழ்நாட்டுடன் சுருக்கிக் கொண்டாலும், அவை முன்னெடுக்கும் தத்துவங்கள் இந்தியா முழுமைக்கும் ஏற்றவாறு அமைந்திருக்கிறது என்று எழுதிக் காட்டினார்கள்.

அந்த அடிப்படையில்தான், நாம் தமிழ்நாட்டை ஆண்டாலும், நாம் முன்னெடுக்கும் திட்டங்கள், அமல்படுத்தி வரும் திட்டங்கள் இந்தியா முழுமைக்கும் அவசியமான, முக்கியமானவையாக அமைந்திருக்கின்றன.

இந்தியா முழுமைக்கும் வர வேண்டும் என்றால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும். மாநிலத்தை ஆளும் முதலமைச்சராக இருப்பதால், நான் இப்படி சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்தாரே இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, இதைத்தான் வலியுறுத்தி சொன்னார். ஒரு மாநிலம் வளர வேண்டும் என்று சொன்னால், அந்த மாநிலத்திற்கு உட்பட்டிருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும். மாநிலத்தின் முதலமைச்சர் என்பதால், மாவட்டங்களை நான் மறந்துவிடவில்லை.

இப்போது, திருப்பத்தூர் மாவட்டத்திற்கான திட்டங்களை அறிவித்திருக்கிறேன். மாலையில், வேலூருக்கு போகிறேன், நாளைக்கு இராணிப்பேட்டைக்கு போகிறேன். இப்படி தொடர்ந்து மாவட்டத்துக்கான திட்டங்களை நான் அறிவிக்க இருக்கிறேன். இப்படி அனைத்து மாவட்டங்களையும் வளர்த்தெடுப்பதை முக்கியமாக நான் நினைக்கிறேன்.

மாவட்டங்களுக்கான பொதுவான திட்டங்களை அறிவித்தால் போதுமா? அதோடு கடமை முடிந்துவிடுகிறதா? இல்லை! ஒவ்வொரு தனிமனிதருடைய தேவையையும் நிறைவேற்றியாக வேண்டும். அந்த வகையில்தான் அனைத்து மக்களிடமும் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றையும் நான் நிறைவேற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். இதுதான் நாம் இன்றைக்கு பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறோமே, திராவிட மாடல் ஆட்சி இது தான்! இது தான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணம்!

இந்த இலக்கணத்தில் இருந்து இம்மியளவும் மாறாமல் இந்த ஆட்சி தொடர்ந்து பீடுநடை போடும். அப்படி நடந்தால், ஐந்தாண்டு காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழ்நாடு நிச்சயம் பெறும். உங்கள் ஒவ்வொருவருடைய குடும்பமும் வளம் பெற வேண்டும்; நல்வாழ்வு பெற வேண்டும்; அதற்கு என்ன செய்ய வேண்டும்? நன்றாக கவனியுங்கள், உங்கள் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க வேண்டும்! படித்த பின்னர் அவர்கள் வேலை தேடித் தவிப்பதை தடுக்கத்தான், சமீபத்தில், மாணவர்களுக்கான கல்வி வேலைவாய்ப்பிற்கான சிறப்புத் திட்டமான “நான் முதல்வன்” என்ற திட்டத்தை நான் துவக்கியிருக்கின்றேன். “நான் முதல்வன்” என்றால் ஸ்டாலின் மட்டும் முதல்வன் இல்லை. இங்கே இருக்கக்கூடிய அத்தனை பேரும் முதல்வர்கள். இளைஞர்கள், மாணவர்கள் அத்தனை பேரும் முதல்வனாக தன்னை கருத வேண்டும்.

உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு அது பெரிதும் உதவும். வாழ்க்கை வழிகாட்டி திட்டமாக, இளைஞர்களிடையே இந்தத் திட்டம் வரவேற்பை இன்றைக்கு பெற்று வருகிறது. இப்படி, ஒவ்வொரு திட்டத்தையும், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் நலன் கருதியே, இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

உங்களின் வாழ்வு உயர, தமிழ்நாடும் உயரும். அத்தகைய பொற்காலத்தை உருவாக்குவதற்காகதான் எனது உடல்சோர்வைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், நான் உழைத்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் சொல்லட்டுமா, எனது சக்தியை மீறி உழைத்துக்கொண்டு இருக்கிறேன். நான் மட்டுமல்ல, அனைத்து அமைச்சர்களும் அப்படித்தான் செயல்பட்டு வருகிறார்கள். அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள், அலுவலர்கள் அனைவருமே அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதலமைச்சர் பொறுப்பில் இருக்கின்ற நானும், அரசின் இளநிலைப் பொறுப்பில் இருக்கிற ஓர் அலுவலரும் ஒரே மாதிரியான நோக்கத்துடன் செயல்பட்டால், இந்த அரசுதான் சிறப்பான அரசாக விளங்கிடும். அத்தகைய அரசாக இன்றைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

இத்தகைய ஆட்சிக் காலமானது தமிழ்நாட்டின் பொற்காலம்! இந்தப் பொற்கால ஆட்சியைத் தொடர்வோம்… இந்தப் பொற்கால ஆட்சியைத் தொடர்வோம்… இந்தியாவுக்கே முன்மாதிரியான ஆட்சியாக இதனை மலரச் செய்வோம்" இவ்வாறு முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்