‘மழைநீர் வடிகால் காரணமாக மரங்கள் விழும் நிலையில் உள்ளன’ - சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது தொடர்பாக அனைத்து மண்டலங்களுக்கும் மாநகராட்சி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,‘மழைநீர் வடிகால் காரணமாக மரங்கள் விழும் நிலையில் உள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கேகே நகரில் சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்து பெண் வங்கி மேலாளர் உயிரிழந்தார். இந்நிலையில், சென்னையில் மரங்களை அகற்றுவது தொடர்பாக அனைத்து மண்டலங்களுக்கும் முக்கிய உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தொடர்பான சுற்றறிக்கையின் விவரம்:

‘மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தற்போது காய்ந்த நிலையிலும், தாழ்வாக கீழே விழும் நிலையிலும் மரங்கள் உள்ளன.

இதுபோன்ற பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடி மரங்கள், மரக்கிளைகள் அவ்வப்போது கீழே சரிந்து விழுவதுடன் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் பத்திரிகை நாளிதழ்களில் இருந்து புகார்கள் பெறப்படுகின்றன. இந்தப் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

நகர்ப்புறத்தில் உள்ள மரங்களின் வேர்களுக்கு நகரமயமாக்கத்தினால் நிலங்களில் ஊடுறுவ இடமில்லை என்பதால் சாலையில் பரவி வளர்கின்றன.

மழைநீர் கால்வாய் கட்டுமானம் நடக்கும்போது மரங்களை வெட்டுவதில் சிக்கல் அல்லது அவற்றின் வேர்கள் கட்டுமான அமைப்பைத் தடுக்கின்றன.

பல இடங்களில் மழைநீர் கட்டுமானத்தால் பல மரங்கள் விழும் நிலையில் உள்ளன.

இதுபோன்ற இடங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மரங்களின் எடை மற்றும் விழும் பாதிப்பை குறைக்க மரக்கிளைகளை கத்தரிக்க வேண்டும்.

மிகவும் பலவீனமான மரங்களின் தண்டுகளை அருகில் உள்ள சுற்றுச்சுவரில் கட்டி வைக்கலாம். இவை, விழுவதை தடுக்கவும், வீழ்ச்சிக்கு முன் எச்சரிக்கை செய்யவும் உதவும்.

எனவே, எந்தெந்த தெருக்கள், சாலைகள் பூங்காக்களில், தாழ்வாக மற்றும் காய்ந்த நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் வெட்டி அகற்ற உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவமழை துவங்குவதற்கு முன், சம்பந்தப்பட்ட மண்டலங்களில் உள்ள மரம் அறுக்கும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். இயந்திரங்கள் ஏதேனும் பழுதடைந்திருப்பின் உடனடியாக பழுது நீக்க வேண்டும்’ என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிக்க > மரம் விழுந்து பெண் பலி | முறைமன்ற நடுவம் அறிவுரை, அமைச்சர் உத்தரவை அலட்சியப்படுத்தியதா சென்னை மாநகராட்சி?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE