கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கரோனா மீண்டும் வேகமெடுப்பதால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாளொன்றுக்கு 2 ஆயிரம் பேர் வரை வைரஸ் தொற்றல் பாதிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் யாரும் வெளியேவரவேண்டாம். கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

கரோனா பரவல் மிக தீவிரமாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டதை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே மக்கள் அனைவரும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தமிழக அரசும் கரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE