திமுக ஆட்சிக்காலம் உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக திகழ வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: "பள்ளிக் கல்வியில் பெருந்தலைவர் காமராஜர் காலமும், கல்லூரிக் கல்வியில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் காலமும், சிறப்பாக விளங்கியதைப் போல, இந்த ஆட்சிக் காலம் உயர்கல்வியின், ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாகத் திகழ வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஜமால் முகமது கல்லூரியின் சிறப்புகள் மற்றும் அதன் நிறுவனர்களான, ஜமால் முகமது மற்றும் காஜா மியான் ராவுத்தரின் சிறப்புகளை பட்டியலிட்டுப் பேசினார். பின்னர் அவர் பேசியது: "கல்வி, படிப்பு, பட்டம் ஆகியவற்றைத் தாண்டிய தனித்திறமைகளும், பல்துறை அறிவாற்றலும் இருக்கக்கூடிய இளைஞர்களால் தான் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்பட முடியும், அதிக வளர்ச்சியை அடைய முடியும். அந்த நோக்கத்துக்காகத்தான் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை நம்முடைய தமிழக அரசு தொடங்கி இருக்கிறது. இது என்னுடைய கனவுத் திட்டம். அதனால் தான் என்னுடைய பிறந்த நாளான மார்ச் 1 அன்று அந்தத் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன்.

தமிழக மாணவர்கள், இளைஞர்கள் கல்வியில், அறிவாற்றலில், பன்முகத் திறமையில் முதல்வனாகத் திகழ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டத் திட்டம் தான் “நான் முதல்வன்” என்கிற அந்தத் திட்டம். நேற்றைக்குக்கூட இந்தத் திட்டத்தினுடைய ஒரு பகுதியாக “கல்லூரிக் கனவு” என்கிற உயர்கல்வி வாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை சென்னையில் நான் தொடங்கி வைத்தேன். தொடர்ந்து மாநிலம் முழுவதும் அடுத்த சில நாட்களில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

பள்ளிக் கல்வியில் பெருந்தலைவர் காமராஜர் காலமும், கல்லூரிக் கல்வியில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் காலமும், சிறப்பாக விளங்கியதைப் போல, இந்த ஆட்சிக் காலம் உயர்கல்வியின், ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாகத் திகழ வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த இலக்கு நோக்கிய பயணத்தில் ஜமால் முகமது போன்ற தனியார் கல்வி நிறுவனங்களும் துணைநிற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கல்லூரிக் கல்வியைத் தேடி வரும் இளைஞர்களை, பட்டதாரிகளாக மட்டுமல்ல, அறிவாளிகளாக, அறிவுக்கூர்மை கொண்டவர்களாக, பன்முகத் திறமை கொண்டவர்களாக, வளர்த்தெடுக்க நீங்கள் திட்டமிட வேண்டும். ஜமால் முகமது கல்லூரியில் படித்த மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கமானது உலகின் 19 நாடுகளில் இயங்கி வருவதைப் பார்க்கும்போது, எத்தகைய திறமைசாலிகளை உருவாக்கி இருக்கிறீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. இப்படி படித்த மாணவர்கள் தங்கள் கல்லூரியையும் மறந்துவிடாமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களது கல்விக்கு உதவி செய்து வருவதை அறியும் போது, கல்வியுடன் சிறந்த மனிதாபிமானத்தையும் ஊட்டும் நிறுவனமாக நீங்கள் செயல்பட்டு வருவதை உணர முடிகிறது.

இத்தகைய சிறப்புமிகு கல்லூரியின் முப்பெரும் விழாவில் காணொளி மூலமாகக் கலந்து கொண்டு என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவிக்க விரும்புகிறேன். பின்பு ஒரு முறை இங்கே வரவேற்புரை ஆற்றுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னதுபோல, நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும்போது நான் உங்களுடைய கல்லூரிக்கு வருவேன் என்ற உறுதியளிக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்