சென்னை: கடலூர் - மயிலாடுதுறை மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையிலும், நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் அளக்குடி - திருக்கழிப்பாலை கிராமங்களுக்கு இடையே கடைமடை கட்டமைப்பு சுவர் அமைப்பதற்காக ரூ.540 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதம்: "பாமகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கடந்த 30.05.2022 அன்று தங்களை முதல்வரின் முகாம் அலுவலகத்தில் வாழ்த்து பெறுவதற்காக சந்தித்த போது, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டுவது உள்ளிட்ட நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதையேற்ற நீங்கள், கொள்ளிடம் தடுப்பணைகள் குறித்து ஆய்வு செய்து ஆக்கப்பூர்வமான யோசனைகளைத் தெரிவிக்கும்படியும், அவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தீர்கள். இதுகுறித்த ஆய்வுக்கு எனக்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும் அதிகாரிகளுக்கு ஆணையிட்டீர்கள். நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதற்காகவும், எனது கோரிக்கையை ஏற்றதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுடனான சந்திப்புக்குப் பிறகு நீர்வளத்துறை அதிகாரிகள் என்னைத் தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசினார்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த 17.06.2022 அன்று மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடிக்கு நேரடியாகச் சென்று கடைமடைக் கட்டமைப்புச் சுவர் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்தேன். நீர்வளத்துறை பொறியாளர்களும் இந்த ஆய்வில் கலந்து கொண்டார்கள். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து, கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் கடல் நீர் உள் நுழைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தேன். அளக்குடி - திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவர் பணிகளை உடனடியாக தொடங்கி விரைவாக முடிக்க வேண்டும் என்பது தான் பொதுமக்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.
கொள்ளிடம் ஆற்றிலிருந்து அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் அளக்குடியில் தொடங்கி 22 கிலோ மீட்டர் அளவுக்கு கடல் நீர் உள்நுழைந்திருக்கிறது. சந்தப்படுகை, திட்டுப்படுகை, அனுமந்தபுரம், முதலைமேடு உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது. இதனால், குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.
» கட்டணமில்லா பயண சேவை பேருந்துகள் | வசூல் சரிந்ததால் பேட்டா குறைந்தது - வருத்தத்தில் ஊழியர்கள்
மேலும், இப்பகுதிகளில் உள்ள 10,000 ஏக்கர் விளைநிலங்கள் உவர் நிலங்களாக மாறி விட்டன. இதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்வதையே முற்றிலுமாக நிறுத்தி விட்டனர். இத்தகைய சூழலில் இனியும் தாமதிக்காமல் அளக்குடி - திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவரை உடனடியாக அமைத்தால் தான் இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் வீணாவதை தடுக்க முடியும்.
அதேநேரத்தில் இந்த கடைமடை கட்டமைப்புச் சுவரை விரைந்து கட்டி முடிக்கும்பட்சத்தில், அங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்த முடியும்; உப்புத்தன்மை கொண்டதாக மாறிய நிலங்களை மீண்டும் விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களாக மீட்டெடுக்க முடியும்.
அதுமட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் சிக்கலையும் தீர்க்க முடியும். நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் அந்த பகுதிகளில் விவசாய மறுமலர்ச்சியும் ஏற்படும். வங்கக்கடலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அளக்குடி பகுதியில் கடைமடை கட்டமைப்பு கட்டுவதற்கு ரூ.540 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கடைமடை கட்டமைப்புச் சுவர் கட்டி முடிக்கப் பட்டால், அதில் 0.366 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்தத் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளுக்காக ரூ.94.52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மண் பரிசோதனை மற்றும் பிற ஆய்வுப் பணிகளும் நிறைவடைந்து விட்டன. இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நீர்வளத்துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறேன். இந்த பணிகள் முடிவடைந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், ஒப்பந்தப்புள்ளிகளைப் பெற்று கடைமடை கட்டமைப்புச் சுவரை கட்டும் பணிகளை தொடங்க முடியும்.
அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிவேளூர் - கடலூர் மாவட்டம் -நல்லாம்புத்தூர் இடையே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்கள் பயனடையும். இந்தத் திட்டத்தையும் ரூ.399 கோடி செலவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு, திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் திருச்சி மண்டலத்தில் நடைபெற்று வருவதாக அறிகிறேன்.
அளக்குடி & திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவர், மாதிரிவேளூர் -நல்லாம்புத்தூர் தடுப்பணை ஆகிய இரு திட்டங்களையும் செயல்படுத்தினால் இருநூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் மறுமலர்ச்சி பெறும். இந்த நன்மைகளைக் கருத்தில் கொண்டு இந்த இரு திட்டங்களுக்கும் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு தாங்கள் ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago