சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இருபுறமும் நடைமேடை அமைக்கும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் புறநகர் ரயில் நிலையங்களில் இருபுறமும் நடைமேடைகள் (இரட்டை நடைமேடைகள்) அமைக்கும் பணியில் ரயில்வேநிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சென்னையில் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை உள்ளது. சென்னை கடற்கரை-வேளச்சேரி, சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு, சென்னை மூர்மார்க்கெட் வளாகம் - அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி உட்பட பல்வேறு வழித்தடங்களில் தினசரி 670-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதில், சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடம் முக்கியமானதாகும். இந்த தடத்தில் 250-க்கும்மேற்பட்ட சேவைகள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்கின்றனர்.

இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கிநெரிசலின்றி வெளியே செல்லும்விதமாக இருபுறமும் நடைமேடைகள் இருக்கும் வகையில், இரட்டை நடைமேடைகளை அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பரிந்துரைக் கடிதம்

இந்த கோரிக்கையின்படி, 6 ரயில் நிலையங்களில் இரட்டை நடைமேடைகளை அமைக்க ரயில்வே துறைக்கு தெற்கு ரயில்வேபரிந்துரைக் கடிதம் அனுப்பியது. இந்த பரிந்துரை ஏற்கப்பட்டதால், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, பரங்கிமலை, குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய 6 ரயில் நிலையங்களில் இருபுறமும் நடைமேடைகள் அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. தற்போது, இந்தப் பணிகள் முடிந்துவிட்டன.

இதைத் தொடர்ந்து, மீதமுள்ளநிலையங்களிலும் இருபுறமும் நடைமேடை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்கெனவே, சென்னை எழும்பூர், சென்னை பூங்கா, மாம்பலம், கிண்டி உள்ளிட்ட 5 புறநகர் ரயில்நிலையங்களில் இரட்டை நடைமேடைகள் உள்ளன. தற்போது 6 புறநகர் ரயில் நிலையங்களில் இருபுறமும் நடைமேடை அமைக்கும் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம் சென்னை எழும்பூர், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சென்னை பூங்கா, சென்னை கோட்டை ஆகிய 12 நிலையங்களில் இருபக்கமும் நடைமேடைகள் உள்ளன.

இந்த நிலையங்களில் உள்ள இரட்டை நடைமேடைகள் பயணிகளுக்கு பேருதவியாக உள்ளன. ஒரு நிலையத்தில் இரட்டை நடைமேடை அமைக்க சுமார் ரூ.1 கோடி செலவாகும். இதுதவிர 5 நிலையங்களில் இருபுறம் நடைமேடைகள் அமைக்க திட்டமிட்டு அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றனர்.

ரூ.327 கோடி ஒதுக்கீடு

தெற்கு ரயில்வேயில் பயணிகளின் வசதிக்காக, ரூ.327.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 2022-23-ம் நிதியாண்டில், தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்காக ரூ.3,861 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி, நிதியில் இருந்து முக்கிய ரயில் நிலையங்களில் இருபுறமும் நடைமேடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE