சென்னை: “அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி ஜூன் 27-ல் நடத்தும் மாநிலம் தழுவிய போராட்டம், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்” என்று தமிழக காங்கிரஸாருக்கு அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய ராணுவ பணிகளுக்கு ஆள் சேர்ப்பதில் நீண்டகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளை புறக்கணித்து விட்டு புதிய நடைமுறை மூலம் 46 ஆயிரம் படைவீரர்களை அக்னி பாதை என்கிற திட்டத்தினை மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
ரயில்வே உள்ளிட்ட பொதுச் சொத்துகளை நாசப்படுத்துகிற வகையில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதனால், முன்னூறுக்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் இளைஞர்களே முன்னின்று தன்னெழுச்சியாக நடத்தியவையாகும். இவை எதுவும் அரசியல் கட்சிகளால் முன்னின்று நடத்தப்பட்டவை அல்ல.
நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் மோடி அரசு அக்னி பாதை திட்டத்தை செயல்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது இளைஞர்களிடையே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. அக்னி பாதை திட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசு நிதிச்சுமையை காரணமாக கூறுகிறது.
» திருமாவளவன் தாயாரின் உடல்நலம்: முதல்வர் தொலைபேசியில் விசாரித்தார்
» ‘இனிமேல் இவ்வாறு பேச மாட்டோம்’ - ஹிஜாப் வழக்கில் முன்ஜாமீன் மனுதாரர்கள் பிரமாண பத்திரம் தாக்கல்
குறிப்பாக, அக்னி பாதை திட்டத்திற்கு வேலை வாய்ப்பு உத்தர வாதமோ, ஓய்வூதியமோ கிடையாது. இதனால் அரசுக்கு நிதிச்சுமை குறையும் என்று கருதப்படுகிறது. ஆனால், மத்திய அரசு பாதுகாப்புத் துறைக்கு 2022-23ம் ஆண்டில் ஒதுக்கிய மொத்த தொகை ரூபாய் 5 லட்சத்து 25 ஆயிரத்து 166 கோடி. ஆனால், ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 1 லட்சத்து 19 ஆயிரத்து 696 கோடி.
இது மொத்த ஒதுக்கீட்டில் 20 சதவிகிதமாகும். இதனடிப்படையில் பார்த்தால் ஒய்வூதியத்தை காரணமாக கூறுவது ஏற்கக் கூடியதாக இல்லை. 17 முதல் 21 வயது நிரம்பிய இளைஞர்கள் 46 ஆயிரம் பேரை அக்னி பாதை திட்டத்தின் மூலம் சேர்க்கப் போவதாக கூறுப்படுகிறது. இவர்களுக்கு 6 மாத பயிற்சியும், 42 மாத பணியும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 42 மாதத்திற்குப் பிறகு 46 ஆயிரம் பேரில் 25 சதவிகிதமான 11,500 பேருக்கு வேலை உறுதி செய்யப்பட்டு மீதியுள்ள 34,500 பேர் வேலையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். வெளியேற்றப்பட்ட இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மத்திய அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை.
6 மாத ராணுவ ஆயுதப் பயிற்சி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் வேலையை விட்டு வெளியேறுகிற போது, மாற்று வேலைக்கு தகுதியற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள். இத்தகைய இளைஞர்கள் நிரந்தர வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட சூழலில் தீவிரவாதம், பயங்கரவாதக் குழுக்களின் வலையில் சிக்கக் கூடிய ஆபத்து இருக்கிறது. ஆயுத பயிற்சி பெற்ற இளைஞர்கள் தவறான வழியில் அழைத்துச் செல்லப் படுவார்களேயானால், அதைவிட பேராபத்து இந்த நாட்டிற்கு வேறு எதுவும் இருக்க முடியாது. இது குறித்து மத்திய அரசு கவலைப் பட்டதாக தெரியவில்லை.
ஆறு மாதத்தில் ஒரு இளைஞன் ராணுவத்தில் முழுமையான பயிற்சி பெற முடியாது. நான்கு ஆண்டுகள் மட்டுமே பணியில் சேருகிற ஒரு இளைஞர் இந்த நாட்டிற்காக தியாகம் செய்வதற்கு முன்வருவாரா ? ராணுவப் பணிகளுக்கே உரிய அர்ப்பணிப்பு உணர்வும், உயிரைத் துறக்கிற மனநிலையும் ஏற்படுமா என்பது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். அக்னி பாதை திட்டத்தின் மூலம் மத்திய அரசு இன்றைய இளைஞர்களை விஷப் பரிட்சைக்கு ஆளாக்கியிருக்கிறது. இந்திய ராணுவத்தில் சேர்ந்து இந்த நாட்டிற்காக கடமையாற்ற வேண்டும் என்ற கனவுகளோடு இருந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்கால கனவு சிதைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் தான் நாடு முழுவதும் இளைஞர்கள் தெருவில் நின்று போராடுகிறார்கள். இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் தராத, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டுமென்று தலைவர் ராகுல் காந்தியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் அரைகூவல் விடுத்திருக்கிறார்கள்.
இதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்னி பாதை திட்டத்திற்கு எதிராக வருகிற ஜூன் 27 திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்த எட்டு ஆண்டுகளில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது.
இந்த நிலையில், இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று கேஎஸ் அழகிரி கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago