அதிமுக சாதிக் கட்சியாக மாறிவிட்டது: முன்னாள் செய்தித் தொடர்பாளர் வா.புகழேந்தி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கோவை: அதிமுக சாதிக் கட்சியாக மாறிவிட்டது என வா.புகழேந்தி தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் வா.புகழேந்தி நேற்று கோவை வந்தார். உடையாம்பாளையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காமெடி செய்துள்ளார். ஏற்கெனவே செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் 5 வருடம் வரை நீடிக்கலாம்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் கொண்டுவரப்பட்ட துணை விதியை திருத்தப் போய் தான் தற்போது பெரும் சர்ச்சை நீடித்து வருகிறது. பொதுக்குழு ரகளைக்கு பழனிச்சாமிதான் காரணம்.

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சி பொதுமக்கள் விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தீர்மானங்கள் எழுதி, நீதிமன்றம் உத்தரவிட்ட பின் தூக்கி எறியப்பட்ட முதல் கூட்டம் இதுதான்.

ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூடாது. அதிமுகவை ஒழிக்க வேண்டுமென அவர்கள் முடிவெடுத்து விட்டார்கள். அதிமுக சாதிக் கட்சியாக மாறிவிட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, ஓ.பன்னீர்செல்வத்தை தான் அழைத்து அருகில் அமரவைத்து ஆலோசனை மேற்கொள்வார்.

என்றைக்காவது பழனிச்சாமியை அழைத்து அவர் ஆலோசனை கேட்டது உண்டா? ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, சசிகலா ஆகிய மூவருக்கும் ஓட்டெடுப்பு நடத்தி தலைமையை நிரூபித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE