புதுக்கோட்டையில் விவசாயத்தை போற்றும் விதமாக விவசாயி கோட்டுருவத்துடன் கூடிய கல்வெட்டு நட்ட மன்னர்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டம் ஆத்தங்கரை விடுதி ஊராட்சிக்குட்பட்ட கீழவாண்டான் விடுதி வயல்வெளியில் விஜய ரகுனாத ராயத் தொண்டைமானால் ஏற்படுத்தப்பட்ட விஜய ரகுநாதாராய சமுத்திரம் எனும் பாசனத்துக்கான நீர்நிலை மற்றும் மிகை நீர் வெளிப்போக்கு அமைப்பான கலிங்கு அமைத்தது குறித்த புதிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு.ராஜேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான ஆய்வுக் குழு உறுப்பினர்கள் கஸ்தூரி ரங்கன், முன்னாள் ஓய்வுபெற்ற ஆணையர் மணிசேகரன், ஆத்தங்கரை விடுதி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர் பழனிச்சாமி ஆகியோர் கண்டெடுத்தனர்.

இந்தக் கல்வெட்டின் சிறப்பம்சம் குறித்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறியதாவது: புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும், பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி வழங்குவதிலும் சிறந்து விளங்கினர். குறிப்பாக அவர்கள் அமைத்த நீர்நிலைகளையும், அரச நிர்வாக கட்டமைப்புகளையுமே வரலாற்று ஆய்வாளர்கள் பெருமிதமாக கூறுகின்றனர்.

எனினும், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் தொண்டைமான்களின் பெயரில் நீர்நிலை அமைக்கப்பட்டது குறித்த கல்வெட்டு சான்றுகள் இல்லை.

இந்நிலையில், நூற்றாண்டு விழா காணும் ராஜகோபால தொண்டைமான் முன்னோரும், 2-வது மன்னருமான விஜயரகுநாத ராய தொண்டைமான் பெயரில் அமைக்கப்பட்ட பாசன நீர்நிலைக் கலிங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு மூலம் தொண்டைமான்கள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள் என்ற கருத்து உறுதியாகிறது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் மேற்புறம் திருநாமக்குறியீடும், அதன் கீழே ‘ விசயரகுநாத ராயசமுத்திரம் அக்கிரகாரத்து கலிங்கில்’ என்ற தகவலும் பொறிக்கப்பட்டிருக்கிறது.

கல்வெட்டின் கீழ் பகுதியில் ஏர் கலப்பையுடன் ஒரு விவசாயி நின்ற நிலையில் வரைக்கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது. கல்வெட்டு இருக்கும் ஊரான துவார் கிராமத்தில் அக்கிரகாரம் என்ற குடியிருப்பு பகுதி இருந்திருப்பது குறித்து மக்கள் செவி வழிச்செய்தியாக தெரிவிக்கின்றனர்.

இத்தகவல் மூலம் இவ்விடத்தின் அருகாமையில் இக்கலிங்கு அமைக்கப்பட்டு, அக்கிரகாரத்து கலிங்கில் என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று கருதலாம்.

தொண்டைமான் வம்சாவளியைச் சேர்ந்த 2-வது மன்னர் விஜயரகுநாத ராய தொண்டைமான் ஆட்சிக்காலமான பொது ஆண்டு 1730 முதல் 1769-ம் ஆண்டுக்குள்ளாக இந்த பாசன நீர்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் மன்னரின் பெயரிலேயே விஜயரகுநாத ராய சமுத்திரம் என்று பெயர் சூட்டப்பட்டு அர்ப்பணித்திருப்பதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது.

இந்த நீர்நிலை அமைப்பு விவசாயத்துக்காகத்தான் ஏற்படுத்தியது என்பதை வெளிப்படுத்தும் வகையிலும், விவசாயப் பணியை பெருமைப்படுத்தும் வகையிலும் கல்வெட்டின் கீழ்புறம் வரை கோட்டுருவமாக கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற விவசாயி சின்னம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் வேறு எந்த பகுதியிலும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்தக் கள ஆய்வின்போது துவார் உயர்நிலைப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் பங்கெடுத்துக்கொண்டனர் என்றார்.

புதுக்கோட்டையில் மன்னர் நூற்றாண்டு விழா நடைபெற்று வரும் நிலையில் விவசாயத்தை போற்றும் விதமான மன்னர்காலத்து கல்வெட்டு கிடைத்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்