சென்னை: சென்னை - தரமணியில் உள்ள டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் சிப்காட் தொழில் புத்தாக்க மையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொழில் துறை சார்பில், சென்னை, தரமணி, டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில் கலந்து கொண்டு, சென்னை டைடல் பார்க்கில் 212 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காக்களில் 33.46 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து, திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டை மேம்பட்ட உற்பத்தி மையமாக (Advanced Manufacturing Hub) உருவாக்க வேண்டுமென தமிழக முதல்வர் உத்தரவிட்டு, அதற்கான பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார். மேலும், நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு (Industry 4.0) தமிழகத்தின் மாணவர்களையும், தொழிலாளர்களையும் தொழிலகங்களையும் தயார்படுத்திக் கொள்வதற்கு தொலைநோக்கு பார்வையுடன் “நான் முதல்வன்” திட்டம், “அறிவுசார் நகரம்” (Knowledge City) மற்றும் ஆராய்ச்சி பூங்காக்கள் (Research Parks) அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசின் தொழில் துறை சார்பில் சென்னை, டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
» “நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்குத் தயாராக தமிழகம் முயற்சி” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
» அக்னி பாதைக்கு எதிராக புதுச்சேயில் ஜூன் 27-ல் காங்கிரஸ் 3 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்
தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் (TANCAM)
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான டசால்ட் சிஸ்டம்ஸ் (Dassault Systems) உடன் இணைந்து, சென்னை டைடல் பூங்காவில் 212 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையத்தை (TANCAM) தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
சென்னையை மையமாகக் கொண்டு, மைய மற்றும் துணை மைய மாதிரி (Hub and Spoke model) அடிப்படையில் இயங்கும் TANCAM, மாநிலமெங்கும் உள்ள கல்வி நிறுவனங்களுடனும், தொழில் நிறுவனங்களுடனும் இணைந்து, துணை மையங்களை நிறுவி, பரவலாக்கப்பட்ட திறன் பயிற்சி, புதிய பொருட்கள் உருவாக்குதல் (Product Development), நவீன உத்திகள் ஆகியவை பெருக வழிவகுக்கும். மாணவர்களுக்கும், தொழில் முனைவோருக்கும், அவர்களின் படிப்புக்கும், பணிக்கும் இடையூறு ஏதுமின்றி மெய்நிகர் சூழல் வழியாக வளர்ந்துவரும் மேம்பட்ட தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகளை அளிக்கும்.
சிப்காட் தொழில் புத்தாக்க மையங்கள் (SIPCOT Industrial Innovation Centres)
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காக்களில் 33.46 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்களை (SIPCOT Industrial Innovation Centres) தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
ஒவ்வொரு மையமும் 23,500 சதுர அடி பரப்பளவில் சக பணியிடங்கள், சந்திப்பு மற்றும் கூட்ட அரங்குகள், உபகரணங்களுடன் கூடிய புத்தாக்க ஆய்வகங்கள், 545 இருக்கைகள் மற்றும் 228 பணி நிலையங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இம்மையங்கள் தொழில்துறைக்கான புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், தொடக்கநிலை தொழில் முனைவோர் விரைவில் வளர்ந்திடவும், தமிழ்நாட்டில் உயர் தொழில்நுட்ப வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், மேம்பட்ட உற்பத்தி மற்றும் போட்டித் தன்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும், திறன் கொண்ட உலகத்தரம் வாய்ந்த மையங்களாக விளங்கும்.
திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் (Neo Tidel Parks)
தமிழகத்திலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் மினி டைடல் பூங்காக்கள் (Neo Tidel Parks) அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது, அதனை செயல்படுத்தும் வகையில், திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் முறையே ரூ.41.90 கோடி மற்றும் ரூ.35 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார். இப்பூங்காக்கள் செயல்படத் தொடங்கும்போது, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அவர்களது மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி முதிர்வு கணக்கெடுப்பு (Industry 4.0 Maturity Survey)
தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனமும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நாட்டிங்காம் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளும், நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி முதிர்வு கணக்கெடுப்பு (Industry 4.0 Maturity Survey) தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தக் கணக்கெடுப்பில் திரட்டப்படும் தரவுகளைக் கொண்டு நிறுவனங்கள், தங்கள் இலக்குகளை அடைவதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை அடையாளம் காணவும், அவற்றை மதிப்பீடு செய்யவும், அதற்கேற்ப தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் உதவும்.
இம்மாநாட்டில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளீதரன், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ. சுந்தரவல்லி, இ.ஆ.ப., டசால்ட் சிஸ்டம்ஸ் மேலாண்மை இயக்குநர், என்.ஜி.தீபக், ஃபோர்ஜ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சங்கர் வானவராயர், தொழிலதிபர்கள், தொழிலகங்களின் தலைமை செயல் அலுவலர்கள், அயல்நாட்டுத் தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago